காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக திமுகவினர்’துரோகி’ என கோஷம் எழுப்பிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நீண்ட இழுபறிக்குப் பிறகு, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 5 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனிடையே, தேர்தலில் திமுக பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பாகவே தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த திமுக தொண்டர்கள், தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காயிதே மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தினர். அதன் ஒரு பகுதியாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்தார். அந்தச் சமயத்தில், அங்கிருந்த திமுக தொண்டர்கள் செல்வப் பெருந்தகையை நோக்கி “துரோகி”, “பச்சோந்தி” என அதிரடியாகக் கோஷங்களை எழுப்பினர். மேலும், “திமுகவிற்கு நன்றிக்கடன் கூட செலுத்தாமல் கூட்டணியை விட்டுச் சென்றது நியாயமா?” என்ற விமர்சனங்களையும் முன்வைத்தனர்.
இதனால், செல்வப் பெருந்தகையுடன் வந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப் பெருந்தகை கூறுகையில், “திமுகவினரோடு எங்களுக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. திடீரென கூட்டணியை விட்டுச் சென்றதால் அவர்களுக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும். இந்தச் சங்கடங்களையும் வருத்தங்களையும் மேலும் கூர்மைப்படுத்த வேண்டாம். இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது அவர்களது தனிப்பட்ட விருப்பம்” என்று தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக – காங்கிரஸ் இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இன்று இரு கட்சியினரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
