டிஜிட்டல் திண்ணை: மாசெ 25 லட்சம், எம்.எல்.ஏ 10 லட்சம் – அறிவாலய ஆர்டர் – அலறும் நிர்வாகிகள்!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன்லைனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனுக்கு வந்தது.

“விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத் தேர்தலுக்கு வேட்பாளர்களை திமுகவும், அதிமுகவும் அறிவித்துவிட்டன. அடுத்த கட்டமாகப் பொறுப்பாளர் பட்டியலை அறிவித்து இரு கட்சிகளும் களமிறங்கிவிட்டன. இடைத் தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் வியூகம் என்பது அதிகார பலமும், பண பலமும்தான் என்பது தமிழகத்தில் கடந்த சில பத்தாண்டுகளாகவே பழகிவிட்ட விஷயமாகிவிட்டது. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதிக்கு 28 மாவட்டங்கள், நாங்குநேரிக்கு 27 மாவட்டங்கள் என்று பொறுப்புக் குழு அமைத்துக் களமிறங்கிவிட்டனர்.

ADVERTISEMENT

ஆளுங்கட்சி அதிமுக, எதிர்க்கட்சி திமுக ஆகியவற்றின் கரன்சி வியூகங்கள்தான் இந்த இடைத் தேர்தலின் முக்கிய அங்கமாக இருக்கின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே விக்கிரவாண்டி தொகுதியில் ஒவ்வொரு பூத்துக்கும் ஆரம்பகட்ட ஆயத்த செலவுக்காக தலா ரூ.20,000த்தை இறக்கியிருந்தது அதிமுக. ஆனால், திமுக தரப்பிலோ புகழேந்திதான் வேட்பாளர் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் அவர் விருப்பமனு கொடுப்பதற்கு முன் அவரிடமே பூத் செலவுக்கு மாவட்டச் செயலாளர் நிதி கேட்டு வாங்கியிருக்கிறார். அதிமுகவின் நேர்காணலில், ‘நீங்கள் எவ்வளவு செலவு செய்வீங்க?’ என்ற கேள்வி கேட்கப்படவே இல்லை என்கிறார்கள். ஆனால், திமுக நேர்காணலில் கேட்ட நான்கு கேள்விகளில், இரண்டாவது கேள்வியே, ‘நீங்க எவ்வளவு செலவு செய்ய முடியும்?’ என்பதுதான்.

ADVERTISEMENT

நாங்குநேரி இடைத் தேர்தலில் காங்கிரஸுக்குப் பொருளாதார ரீதியாக உதவ முடியாது என்று திமுக சொல்லிவிட்டது. எனவே தேர்தல் செலவு என்ற அடிப்படையில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறது திமுக. மேலும், வேட்பாளர் அறிவிப்பு அன்றைக்கே மாவட்டச் செயலாளர் பொன்முடியை அழைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘பூத் கமிட்டிக்கான செலவுகளை நீங்கதான் பார்த்துக்கணும்’ என்று சொல்லிவிட்டார். இதையடுத்து அதில் பிசியாகிவிட்டார் பொன்முடி. வேட்பாளர் புகழேந்தி எவ்வளவுதான் முயன்றாலும், சி.வி.சண்முகத்தின் பண பலத்துக்கு ஈடு கொடுக்க முடியுமா என்று திமுகவினரே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்தக் கேள்விகள் எல்லாம் முளைத்த நிலையில்தான் பொறுப்புக் குழுச் செயலாளராக ஜெகத்ரட்சகனை நியமித்திருக்கிறது திமுக தலைமை. அந்த அளவிலாவது அவரை தேர்தல் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் தலைமையின் திட்டம்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் வரும் அலைபேசி அழைப்புகள் அவர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. தலைமைக் கழகத்திலிருந்து பேசும் அந்த ஆக்டிங் பொருளாளர், வழக்கமான நலம் விசாரித்துவிட்டு மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் நிதியாக 25 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் நிதியாக 10 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு திமுக நிர்வாகிகள் அதிர்ந்துவிட்டார்கள். எம்.எல்.ஏ.வே மாவட்டச் செயலாளர்களாகவும் இருக்கும் நிலையில் அவர்களுக்கு மாவட்டச் செயலாளருக்குரிய பணம் மட்டும் கொடுத்தால் போதும் என்று ஆஃபர் வேறு அளிக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

‘இப்பதான் பார்லிமென்ட் எலெக்‌ஷனுக்கு கோடி கோடியா செலவு பண்ணினோம். அதுக்காக இடத்தை வித்து, காலேஜை வித்து முடிச்சாச்சு. அதுக்கப்புறம் வேலூர் தேர்தல்லயும் ஒட்ட உறிஞ்சிட்டாங்க. இப்ப இடைத் தேர்தலுக்கும் நம்ம மடியிலேயே கைவெச்சா எப்படி?’ என்று திமுகவின் மாவட்டச் செயலாளர்களும், எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்குள் வெளிப்படையாக விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்தப் பணத்தைத் தவிர, அவர்கள் தொகுதிக்கு தங்கள் மாவட்ட நிர்வாகிகளோடு வந்து தங்கி பணியாற்றும் செலவுகள் தனி.

‘சில மாவட்டச் செயலாளர்கள், எம்,எல்.ஏ.க்கள் இதை செய்யத் தயாரா இருக்காங்க. ஏன்னா அவங்களுக்கு இந்த ஆட்சியிலயே கான்ட்ராக்ட் உட்பட வசதிகள் கிடைக்குது. ஆனா, மத்தவங்க என்ன பண்றது? இப்படித்தான் வேலூர்ல முதல்ல பல மாவட்டச் செயலாளர்கள் பணம் செலவு பண்ண தயாராகவே இல்லை. ஆனால், தலைமையின் அடுத்தடுத்த கோரிக்கையை அடுத்து வேற வழியில்லாம கட்சிக்காக அரைகுறையா செலவு பண்ணாங்க. அதனாலயே தேர்தல் வேலையில தொய்வு ஏற்பட்டு வாக்கு வித்தியாசம் ரொம்ப குறைஞ்சுப் போச்சு. இப்ப நடக்குறது சட்டமன்றத் தேர்தல். அதுவும் இரண்டு சட்டமன்றத்துல ஒண்ணுலதான் திமுக போட்டி போடுது. இந்த நிலையில தலைமையும், சம்பந்தப்பட்ட மாவட்டமும் முக்கால்வாசி செலவை ஏத்துக்கிட்டு, மீதிய மாவட்டச் செயலாளர்கள்கிட்ட பகிர்ந்து செய்யுறதுதான் நியாயம். இல்லேன்னா மாவட்டச் செயலாளர்கள்கிட்டயும், எம்.எல்.ஏ.க்கள்கிட்டயும் இருக்கிற இந்த அதிருப்திய அதிமுக வேற மாதிரி பயன்படுத்திக்கவும் வாய்ப்பிருக்கு’ என்று எச்சரிக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share