பாஜகவா? திமுகவா?: கோஷம் போட்டு மெஜாரிட்டி நிரூபித்த தொண்டர்கள்

Published On:

| By Monisha

DMK BJP members proving majority

நெல்லையில் வந்தே ரயில் சேவை துவக்க நிகழ்ச்சியில் பாஜக திமுக தொண்டர்கள் கட்சி கொடிகளை உயர்த்தி கோஷம் எழுப்பி மோதி கொண்டனர். இரு கட்சித் தலைவர்களும் போராடி தொண்டர்களை சமாதானப்படுத்தினர்.

நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்டம்பர் 25) காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

இதையொட்டி நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மாவட்ட தலைவர்கள் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர் .

அதே போல் திமுக தரப்பில் நெல்லை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான், மேயர் சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா, முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த், உட்பட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

அதே போல் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் 100க்கும் மேற்பட்டோர் கையில் கட்சி கொடியோடு பங்கேற்றனர்.

இந்த நிலையில் திடீரென திமுக தொண்டர்கள் கொடியை உயர்த்தியபடி ’கலைஞர் வாழ்க’, ’தளபதி வாழ்க’ என பலத்த கோஷம் எழுப்பினர்.

ADVERTISEMENT

இதை பார்த்து ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் பதிலுக்கு தங்கள் கட்சி கொடியை உயர்த்தி ’மோடி வாழ்க’, ’மோடி மோடி’, ’பாரத் மாதாக்கீ ஜே’ என்று பலத்த கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து அடுத்தடுத்து இருதரப்பினரும் தங்கள் தலைவர்களை வாழ்த்தி ஒருவருக்கொருவர் எதிர் கோஷம் எழுப்பியதால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

அப்போது மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்த மாணவர்கள் இந்த கோஷத்தை கேட்டு பதற்றத்தோடு கீழே இறங்கினர்.

சுமார் 20 நிமிடம் இருதரப்பினரும் மாறி மாறி கோஷம் எழுப்பியதால் பரபரப்பான சூழல் நிலவியது. அரசு நிகழ்ச்சியில் அதுவும் தேசிய அளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அரசியல் கட்சியினர் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சம்பவத்தால் அங்கிருந்த அதிகாரிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.

மேடையில் இருந்த இரு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். பின்னர் விஷயம் வீரியமானதும் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்களையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.

அவர் மைக்கில் பேசும் போது இது அரசியல் நிகழ்ச்சி அல்ல, அரசு நிகழ்ச்சி. எனவே அனைவரும் கொடியை கீழே இறக்குங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

இருப்பினும் அவரது பேச்சைக் கேட்காமல் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் தொடர்ச்சியாக கோஷம் எழுப்பி மோதிக்கொண்டனர்.

திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ மாலைராஜா தங்கள் கட்சி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.

இதையடுத்து ஒரு வழியாக தொண்டர்கள் அமைதி நிலைக்கு திரும்பினார். இந்த களேபேரத்துக்கு மத்தியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நிகழ்ச்சி மேடைக்கு வருகை தந்தார் .

அப்போது பாஜக தொண்டர்கள் ’பாரத் மாதா கி ஜே’ என்று மீண்டும் கோஷம் எழுப்ப தொடங்கினர். இருப்பினும் திமுகவினர் பதில் கோஷம் எழுப்பாததால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

இதற்கிடையில் திட்டமிடப்படாத பல முக்கிய பிரமுகர்கள் மேடையில் ஏறியதால் இருக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது நயினார் நாகேந்திரன் தங்கள் கட்சியினரை கீழே இறங்கும்படி கூறினார்.

அதில் பாஜக மாவட்ட தலைவர்களான தமிழ்ச்செல்வன் மற்றும் தயா சங்கருக்கு இருக்கை கிடைக்கவில்லை. இதனால் இருவரும் கோபித்துக் கொண்டு கீழே இறங்கி சென்றனர்.

பின்னர் தமிழ்செல்வனை நயினார் நாகேந்திரன் சமாதானப்படுத்தி மேடைக்கு அழைத்தார் அதேசமயம் வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் இருக்கை கிடைக்காத கோபத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை விட்டு சென்று விட்டார். பின்னர் மத்திய அமைச்சர் எல்.முருகன் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்திய பிறகு மாவட்ட தலைவர் தயா சங்கர் மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்தார். இதையடுத்து அவருக்கும் இருக்கை வழங்கப்பட்டது.

வழக்கமாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் போலீசார் மற்றும் அதிகாரிகள் பல்வேறு கெடுபிடிகளை விதிக்கும் நிலையில் பிரதமர் தொடங்கி வைக்கும் ஒரு திட்டத்துக்கான நிகழ்ச்சியில் அரசியல் கட்சி கொடிகளை அனுமதித்ததும் அதனால் ஏற்பட்ட பிரச்னையும் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளை முகம் சுழிக்க செய்தது.

சரவணன்

பொன்முடி வழக்கில் அரசு தரப்பு வாதம் ஏற்புடையதாக இல்லை: ஜெயக்குமார்

ஒரு கையில் பெரியார், ஒரு கையில் பிள்ளையார்… பாலாவின் வணங்கான் ஃபர்ஸ்ட் லுக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share