தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி-க்கள் கருப்பு சட்டை அணிந்து இன்று (பிப்ரவரி 8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 31-ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு புயல் வெள்ள நிவாரண நிதி உதவி மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்காததை கண்டித்து, திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, “வஞ்சிக்காதே…வஞ்சிக்காதே…தமிழ்நாட்டை வஞ்சிக்காதே, தூண்டாதே…தூண்டாதே மதவெறியை தூண்டாதே” என்று கோஷங்களை எழுப்பி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளான சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல, நிதிப்பகிர்வில் கேரள மாநிலத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள எம்.பிக்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜி வீட்டில் மீண்டும் ரெய்டு: பின்னணி என்ன?
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் நோக்கமே அடிப்பட்டு விடும் : அன்சூல் மிஸ்ரா