முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள (DMK Alliance Party Leaders) இடதுசாரிகள், விசிக தலைவர்களான பெ.சண்முகம், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் இன்று ஆகஸ்ட் 6-ந் தேதி சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் லேசான உடல்நலன் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி சில நாட்கள் ஓய்வில் இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

தற்போது முழுமையாக குணமடைந்து தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். முதல்வர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ எம்பி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஏற்கனவே சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்களான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை இன்று ஆகஸ்ட் 6-ந் தேதி சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, முதல்வரிடம் நலம் விசாரித்துடன் தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
