ஆளுநர் விவகாரம்: திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்!

Published On:

| By Monisha

DMK Adjournment Notice

ஆளுநர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இன்று (ஜூலை 27) ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அரசுக்கு எதிரான அரசியல் கருத்துகளை ஆளுநர் பேசிவருவதால் சர்ச்சையிலும் சிக்கி வருகிறார்.

இதனால் தமிழக ஆளுநரை திரும்பப் பெற கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு 22 பக்க புகார் கடிதத்தை எழுதியிருந்தார். சட்டத்துறை அமைச்சர் மற்றும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து முதல்வர் எழுதிய கடிதத்தை வழங்கினர்.

அந்த கடிதத்தில், ”வகுப்புவாத வெறுப்பை தூண்டிவிட்டு மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் ஆளுநர். அமைச்சரை நீக்குவது தொடர்பான ஆளுநரின் பரிந்துரை சட்டவிரோதமானது. அவர் அரசியலமைப்பை மீறி செயல்பட்டு வருகிறார்.

சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் ரவி காலதாமதம் செய்கிறார்” என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத்தொடரில் இன்றைய மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க கோரி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கியுள்ள நிலையில் ஆளுநர் விவகாரம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று திமுக நோட்டீஸ் வழங்கியுள்ளது.

மோனிஷா

பிசிசிஐ நடுவர் குழுவில் முதன்முறையாக இடம்பிடித்த சகோதரிகள்!

கிலோவிற்கு ரூ.30 அதிகரித்த தக்காளி விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share