திமுக பவள விழாவையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயமும், அன்பகமும் “75” என்ற எண் கொண்ட பவளவிழா இலச்சினையுடன், லேசர் ஒளிக்கற்றைகள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் அண்ணாவின் பிறந்தாள் (செப்டம்பர் 15), பெரியாரின் பிறந்தாள் (செப்டம்பர் 17) மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாளான செப்டம்பர் 17 ஆகிய மூன்று நாட்களைக் கொண்டாடும் வகையில் ‘முப்பெரும் விழாவை திமுக கொண்டாடி வருகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டு திமுக முப்பெரும் விழா மற்றும் திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் வகையில் பவள விழாவானது செப்டம்பர் 17-ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.
பவள விழாவையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய கட்டிடத்தின் மேல் “75” என்ற எண் கொண்ட பவளவிழா இலச்சினையை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த இலட்சினை லேசர் ஒளிக்கற்றைகள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரத்தில் வண்ணமயமாக ஜொலிக்கிறது. அதற்குமேல் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னமும் மிளிர்கிறது.
மேலும், அண்ணா அறிவாலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் மிளிர்கிறது. அறிவாலயத்தின் நுழைவாயிலில் ஆர்ச் வடிவ வண்ண விளக்குகள் காண்போரை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அறிவாலயத்திற்கு உள்ளே உள்ள அண்ணா மற்றும் கலைஞரின் திருவுருவச் சிலைகளும் வண்ண விளக்குகளால் சிறப்புற அலங்கரிக்கப்பட்டுள்ளன.
சாலையில் செல்பவர்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
திமுக இளைஞரணி தலைமையகமான அன்பகமும், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உத்தரகாண்ட் நிலச்சரிவு: தமிழர்கள் மீட்பு… நலம் விசாரித்த ஸ்டாலின்