பாஜக மீது பிரேமலதா விமர்சனம்!

Published On:

| By Balaji

ஆட்சியதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்துவிடக் கூடாது என மகாராஷ்டிரா நிலவரம் குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக நேற்று காலை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னவிஸும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் பொறுப்பேற்றுக்கொண்டனர். எனினும் அஜித் பவார் முடிவுக்கு தாங்கள் ஆதரவளிக்கவில்லை எனத் தெரிவித்த சரத் பவார், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிராக சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன.

ADVERTISEMENT

இந்த நிலையில் மதுரையில் இன்று (நவம்பர் 24) செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “ஒரே இரவில் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்துள்ளது. இவ்வளவு அவசரமாக ஆட்சியமைக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள்தான் பெரும்பான்மையை நிரூபிப்போம் என எதிரணியைச் சேர்ந்த 3 கட்சிகளும் சேர்ந்து தெரிவித்துள்ளன. எதுவாக இருந்தாலும் நியாயமாக நடைபெற வேண்டும். ஏனெனில் அனைத்தையும் மக்கள் கவனித்து வருகின்றனர். கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்துவிடக் கூடாது. ஆகவே, பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டிவிட்டு பாஜக ஆட்சிக்கு வந்திருக்கலாம்” என்று கருத்து தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிடம் எத்தனை இடங்கள் கேட்கப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு, “முதலில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கட்டும். அதன்பிறகு எங்கள் கட்சி சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் குழு, அதிமுகவின் பேச்சுவார்த்தைக் குழுவோடு அமர்ந்து பேசி யாருக்கு எத்தனை இடங்கள் என முடிவு செய்யப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share