தனது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை இன்று (ஆகஸ்ட் 25) சந்தித்தார்.
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். சுமார் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர் அதனைத் தாண்டி உதவும் குணம் மூலமாகவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். சினிமாவைத் தொடர்ந்து அரசியலிலும் களமிறங்கி எம்.எல்.ஏ ஆகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்தார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்.
அவருக்கு பதிலாக தேமுதிக கட்சி பணிகளை அவரது மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கவனித்து வருகின்றனர். அவ்வப்போது, குடும்பத்துடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படத்தை அவரது மகன்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், விஜயகாந்த் தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 25(இன்று) தொண்டர்களை சந்திக்க உள்ளதாக நேற்று அறிக்கை வெளியிட்டார்.
அதன்படி சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இன்று காலை முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
வந்திருந்த தொண்டர்களுக்கு காலையில் இட்லி, பொங்கல் வடையுடன் வழங்கப்பட்டது. தொடர்ந்து காலை 11 மணி அளவில் இருக்கையில் அமர்ந்தபடியே மேடைக்கு அழைத்து வரப்பட்ட நடிகர் விஜயகாந்த், தொண்டர்களை பார்த்து லேசாக கை அசைத்தார். உற்சாகமாக ‘தம்ஸ் அப்’ காட்டினார்.
பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கிடையே இன்று தொண்டர் படையை பார்த்ததும் விஜயகாந்த் உற்சாகமானார். நீண்ட நாள்கள் கழித்து விஜயகாந்தை பார்த்த தொண்டர்களும் ’கேப்டன் வாழ்க’ என்ற கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
https://www.youtube.com/shorts/fXP2ISQj4v0
அவருடன் புகைப்படம் எடுக்க தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் போட்டி போட்டனர். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
அதோடு முன்னரே கூறியபடி விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த படத்துக்கு ’படைத்தலைவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
நிறைவாக மீன் குழம்பு, கோழி கறியுடன் ஆட்டுக்கறி விருந்துடன் சுடச் சுட மதிய சாப்பாடு தொண்டர்களுக்கு பரிமாறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன், கட்சியின் மாநில நிர்வாகிகள் எல்.கே. சுதிஷ், பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர்கள் மற்றும் படைத்தலைவன் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
பல மாதங்களுக்கு பிறகு விஜயகாந்த் தொண்டர்களை இன்று சந்தித்த நிலையில், தே.மு.தி.க. அலுவலகமே இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
நிலவில் இறங்கிய ரோவர்: வீடியோவை பகிர்ந்த இஸ்ரோ!
“ஜெயலலிதாவின் டிரைவரே இல்லை, சசிகலாவுக்குதான் டிரைவர்” -தனபால் புகாருக்கு கொந்தளித்த எடப்பாடி