தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், இறுகிய முகத்துடன் கட்சி அலுவலகத்தில் இருந்து சென்றுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். Rajya Sabha seat
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. தொடர்ந்து நீண்ட இழுபறிக்கு பின்னர் அதிமுக – தேமுதிக கூட்டணி உருவானது.
அப்போது அதிமுக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அருகில் வைத்துக்கொண்டு பேட்டி அளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல், 2026 தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும்” என்று தெரிவித்திருந்தார்.
திருவள்ளூர்(தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டன.
ஆனால் தேர்தலில் அதிமுக – தேமுதிக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் முடிந்து ஒரு வருடம் ஆகப்போகும் நிலையில், தமிழகத்தில் பதவிக்காலம் முடிகிற 6 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான ரேஸ் தொடங்கியிருக்கிறது.
அதாவது, தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனால் அதிமுக, திமுக கூட்டணியில் ராஜ்யசபா எம்.பி.பதவியை பிடிப்பதற்கான போட்டி ஏற்பட்டுள்ளது.
அதாவது ஒரு ராஜ்யசபா எம்.பி.யை தேர்வு செய்வதற்காக 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. திமுகவிடம் 134 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் அவர்கள் 4 எம்.பி.க்களை தேர்வு செய்யலாம்.
அதுவே அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்4 பேர் உட்பட மொத்தம் 66 பேர் உள்ளனர். ஓபிஎஸ் ஆதரவாளர்களை தவிர்த்தால் 62 எம்.எல்.ஏ.க்கள் தான் இருக்கின்றனர்.
அப்படி பார்த்தால் அதிமுகவால் ஒரே ஒரு ராஜ்யசபா எம்.பியைதான் தேர்வு செய்ய முடியும். இந்த ஒரு சீட்டுக்கு தான் தற்போது அதிமுக – தேமுதிக கூட்டணியில் போட்டி ஏற்பட்டுள்ளது.
அதிமுக உடன் கூட்டணி அமைந்தபோதே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டது. ராஜ்யசபா தேர்தல் வரும்போது வேட்பாளரை அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்திருந்த நிலையில்,
இன்று (மார்ச் 4) காலை சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “யார் சொன்னது? அதிமுக ஒரு சீட் தரும் என்று சொன்னதா? தேர்தல் உடன்படிக்கையை படித்துவிட்டு வந்து பேசுங்கள்” என்று பதிலளித்திருந்தார்.
இது தேமுதிக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து கிளம்பிய பிரேமலதா விஜயகாந்த்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர் பதில் அளிக்காமல், இறுகிய முகத்தோடு காரில் ஏறி சென்றுவிட்டார்.
அதைதொடர்ந்து சற்று நேரத்தில் மறைந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் எக்ஸ் பக்கத்தில் இருந்து ’சத்தியம் வெல்லும் நாளை நமதே’ என பதிவிடப்பட்டிருந்தது. டிஎம்டிகே ஃபார் டிஎன் (DMDKforTN) என்ற ஹேஷ்டேக்கும் பயன்படுத்தப்பட்டிருந்தது.
எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுகமாக பிரேமலதா பதிலளித்திருக்கிறார் என்று தமிழக அரசியலில் பேசப்பட்டது. ஆனால் சற்று நேரத்தில் அந்த பதிவு டெலிட் செய்யப்பட்டது.
அதிமுக கூட்டணியில் ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட் மூலம் தனது மகனையோ அல்லது சகோதரனையோ நாடாளுமன்றத்துக்கு அனுப்பலாம் என்ற பிரேமலதாவின் கனவை எடப்பாடி பழனிசாமி சுக்கு நூறாக்கிவிட்டார். DMDK does not have a Rajya Sabha seat
