கர்நாடக சட்ட சபையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பாடியது சர்ச்சையான நிலையில் தற்போது அவர் மன்னிப்பு கோரி உள்ளார்.
பெங்களூருவில் கடந்த ஜுன் 4ம் தேதி ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு காங்கிரஸ் அரசே பொறுப்பு என சில தினங்களுக்கு முன் நடந்த கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தில் பாஜகவினர் பேசினர்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், நான் காங்கிரஸில் வளர்ந்தவன் உங்களுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்றார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் அசோக், டி.கே.சிவக்குமாரிடம் ‘நீங்கள் ஒரு முறை ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்திருந்தீர்கள் அல்லவா?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த டிகே. சிவக்குமார், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீதத்தை பாடினார். இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பேசுபொருளானது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், சில தினங்களுக்கு முன் ஆர்எஸ்எஸ் பாடலை நான் பாடி இருந்தேன். அதன் வழியாக ஐபிஎல் போட்டி தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் அசோக்கிற்கு பதிலளிக்க முயற்சித்தேன். எனது நண்பர்கள் சிலர் அரசியல் ஆதாயம் பெறவும், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றனர். நான் காங்கிரஸ் கட்சிக்காரனாகவே பிறந்தேன். அப்படியே உயிர் பிரிவேன். காந்தி குடும்பத்தை யாரும் கேள்வி கேட்பதை அனுமதிக்க முடியாது.
எனது செயல் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன். அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். ஆனால், இதை அரசியல் அழுத்தம் காரணமாக செய்யவில்லை. எனது கட்சியின் சகாக்களில் சிலர் இது தொடர்பாக வெளிப்படுத்திய கருத்தினை நான் விரும்பவில்லை. காந்தி குடும்பத்தினரே எனது தெய்வம். நான் அவர்களின் பக்தன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் எனது பயணம் மிகவும் நீண்டது. 100 காங்கிரஸ் பவன்களை நிறுவ உள்ளோம். அது எங்கள் கட்சியின் கோயில். நான் எனது கட்சியின் வரலாற்றில் நிலைத்திருக்க விரும்புகிறேன்” என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
