தீபாவளி திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!

Published On:

| By christopher

Diwali wishes from political leaders

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை பொதுமக்களால் இன்று (நவம்பர் 12) காலை முதல் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தாங்கள் வேலை பார்த்த நகரங்களில் இருந்து பேருந்து, ரயில் மூலம் சொந்த ஊருக்கு திரும்பிய மக்கள் எண்ணெய் குளியல், புத்தாடை, வழிபாடு, பட்டாசு, கம கம காலை பலகாரம் என கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அவற்றில் சில,

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில், “தீபாவளி திருநாளில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் சக குடிமக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளி மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின் பண்டிகை. இருளின் மீது ஒளியின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையையும், அநீதியின் மீது நீதியையும் வென்றதைக் குறிக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.

பல்வேறு மதங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்த பண்டிகையை கொண்டாடி, அன்பு, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை பரப்புகிறார்கள். இந்த திருவிழா கருணை, நேர்மறை மற்றும் செழிப்பு ஆகியவற்றின் சின்னமாகும்.

தீபாவளி பண்டிகை நம் மனசாட்சியை ஒளிரச் செய்து, மனிதகுலத்தின் நலனுக்காக உழைக்க தூண்டுகிறது.
ஒரு தீபம் பலவற்றை ஒளிரச் செய்யும். அதே போல ஏழை எளியோரின் வாழ்வில் மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வரலாம்.

தீபத்திருநாளை நாம் அனைவரும் பாதுகாப்பாகக் கொண்டாடி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பங்களிப்பதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்ப உறுதிமொழி எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது வாழ்த்து பதிவில், “அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அற்புதமான ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். பொய், அநீதி, வெறுப்பு ஆகிய இருள் மறையட்டும். உண்மை, நீதி, அன்பு ஆகியவற்றால் நமது இந்தியா ஒளிரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இந்த தனித்துவமான தீபத் திருவிழா உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும்.

சமுதாயத்தில் அன்பும், சகோதரத்துவமும், நல்லிணக்கமும் இருக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே விருப்பம். அநீதி, அறியாமை, பாகுபாடுகளுக்கு எதிராக நாம் அனைவரும் தொடர்ந்து போராடி, மகிழ்ச்சியான நம்பிக்கை தீபம் நாட்டில் என்றும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாழ்த்துச் செய்தியில், “அனைத்து நாட்டு மக்களுக்கும் தீபங்களின் மகத்தான திருநாளான தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தீபத்திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் புதிய ஒளியையும், மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்” என்று கூறியுள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “அனைவருக்கும் உளம் கனிந்த மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துகள்…. அனைவர் வாழ்விலும் ஒளிபரவி மகிழ்ச்சி பரவட்டும்” என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் -ஐ அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை இறைவன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.

தித்திக்கும் இந்த தீபாவளித் திருநாளில், துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலர, மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட,மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திடவேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

டிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், “விடிவானில் ஒளிர்மீன்கள் விண்ணெல்லாம் ஒளிரட்டும்.. ஐப்பசியின் மழைப்பொழிவில் அகமெல்லாம் மலரட்டும்.. ஆகாயம் பார்த்திருக்கும் அருமைநிலம் செழிக்கட்டும்… தீபாவளி நாளில் திசையெட்டும் பொழியட்டும்!” என்று வாழ்த்தியுள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழக மக்கள் அனைவர் வாழ்விலும், தீமைகள் நீங்கி நல் ஒளி பிறக்கவும், இன்பமும், மகிழ்ச்சியும் பெருகிடவும், அன்பும் சகோதரத்துவமும் நிலைத்திடவும் தமிழ்நாடு பாஜக சார்பாக, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வழக்கம்போல தீபாவளி பண்டிகை நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக தலைவர்கள் யாரும் வாழ்த்து சொல்லவில்லையே என்ற பேச்சும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ICC Worldcup: சண்டை செய்யாமல் பாகிஸ்தான் சரண்… ஆஸ்திரேலியா அபாரம்!

மாதவிடாய் காலங்களில் வயிற்றுவலியால் கஷ்டப்படுறீங்களா?: இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share