தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்புகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவின் நிறுவனம் தனது பால் உபபொருள்களான வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூர்பாகு, குலாப் ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, மோர், சாக்லேட், தயிர் மற்றும் ஐஸ்க்ரீம் போன்ற பால் பொருள்களைத் தயாரித்து ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. அதன்படி, ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பால் உபபொருள்களை ஆவின் பாலகங்கள், முகவார்கள் மூலம் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக பால்வளத் துறை சார்பில், தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் இனிப்புகள் விற்பனை தொடக்க விழா நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சமீபத்தில் நடைபெற்றபோது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆவின் இனிப்புகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் ஆர்டர் கிடைத்துள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்திருந்தார். மேலும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஆண்டைவிட கூடுதலாக 20 சதவிகித விற்பனையை அதிகரிக்க ஆவின் நிறுவனம் சாா்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இனிப்புகள், கார வகை அடங்கிய மூன்று காம்போக்களை ரூ. 300, ரூ.500 மற்றும் ரூ.900 என தள்ளுபடி விலையில் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனுடன் ‘கேரி பேக்’ வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மஞ்சபை அளிக்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
தீபாவளி விற்பனையில் வங்கதேச ஆடைகள்: திருப்பூர் பின்னலாடைக்குப் புதிய சிக்கல்!
