தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் செல்வதால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க நாளை (அக்டோபர் 30) சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு தொடர்ந்து நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறையுடன் மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
கல்வி மற்றும் வேலைக்காக சென்னையில் தங்கி இருக்கும் மக்கள் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு இன்று முதல் கிளம்பியுள்ளனர். இதனையடுத்து சென்னை பெருங்களத்தூர், சிங்கப்பெருமாள் கோயில் தொடங்கி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக 11,176 சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. அதனுடன் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக நாளை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 14 பெட்டிகள் கொண்ட ஏசி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக மறுநாள் காலை 4.40க்கு நாகர்கோவில் சென்றடைகிறது. அதே ரயில் மறுமார்க்கத்தில் அக்.31ம் தேதி காலை 8.45க்கு புறப்பட்டு இரவு 9.55க்கு தாம்பரம் வந்தடைகிறது.
அதே போன்று, தாம்பரம் – மானாமதுரை இடையேயான சிறப்பு ரயில் நாளை இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.45க்கு மானாமதுரை வந்து சேரும். மானாமதுரையில் இருந்து அக்டோபர் 31ம் தேதி காலை 11.45க்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 11.45க்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, கல்லல் மற்றும் சிவகங்கை ரயில் நிலையங்களில் இரு மார்க்கத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”விஜய் ரசிகர்கள் பாதிப்பேர் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்” – சீமான் நம்பிக்கை!
என்னது.. விஜய் பாயாசம் ரிசிப்பி சொன்னாரா? : அப்டேட் குமாரு