தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 14,016 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இதனால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே பிற ஊர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே ரயில் டிக்கெட்டுகள் எல்லாம் விற்று தீர்க்கப்பட்ட நிலையில் தற்போது பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை போக்குவரத்து கழகம் இயக்கவுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஒரு கலந்தாய்வு கூட்டத்தை இன்று (அக்டோபர் 21) நடத்தினார்.
இதன்பிறகு தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14,016 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதில் சென்னையில் இருந்து மொத்தமாக 11,176 பேருந்துகள் இயக்கப்படும்.
வரும் 28ஆம் தேதி முதல் வழக்கமாக இயக்கப்படும் 2092 பேருந்துகளோடு 700 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். 29ஆம் தேதி 2135 சிறப்பு பேருந்துகளும் , 30ஆம் தேதி 2075 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். இந்த மூன்று நாட்களில் 4,900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இந்த பேருந்துகளை இயக்கும் போது ஏற்படும் நெரிசல்களை தவிர்ப்பதற்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், வந்தவாசி, வேலூர், கோவை, திருவண்ணாமலை மற்றும் கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், வழக்கமாக திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பேருந்துகளும் இயக்கப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்ததை விட இந்த ஆண்டு கூடுதலான பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு 9,929 பேருந்துகளும், 2022ஆம் ஆண்டு 10,758 பேருந்துகளும், 2023ஆம் ஆண்டு 10,546 பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இந்த ஆண்டு 11,176 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
அதுமட்டுமில்லாமல், சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் திரும்பி வருவதற்கு ஏற்ற வகையில் அந்தந்த ஊர்களில் இருந்து சென்னை வருவதற்கும் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 7 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகிறது.
இதுவரை 1,02,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகள் வசதிக்காக 24/7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்படவுள்ளது.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 18004256151, 044- 26280445 எண்களில் புகார் அளிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படும். அதுமட்டுமல்லாமல் தனியார் பேருந்துகளும் வாடகைக்கு எடுத்து இயக்கவும் இருக்கிறோம். இதற்காக வெளிப்படையாக டெண்டர் விடப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அரசு பேருந்தில் வசூலிக்கப்படும் கட்டணம்தான் தனியார் பேருந்துகளிலும் வசூலிக்கப்படும். ஏற்கனவே தனியார் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்தான் தற்போது பேருந்துகளை இயக்கப்போகிறார்கள் என்பதால் எந்த பிரச்சினையும் வராது” என்று கூறினார்.
போக்குவரத்து கழகம் தனியார்மயமாக்கப்படுவதாக சிஐடியு கூறுகிறதே என்ற கேள்விக்கு, “சிஐடியுவிற்கு மக்கள் பிரச்னை ஒரு பிரச்னையே அல்ல. தொழிற்சங்க பிரச்னை மட்டுமே பிரதானம். அதிலும் சிஐடியு பிரச்னைதான் அவர்களுக்கு முக்கியம்” என்று குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
அம்மாவில் நடக்கும் பிரச்னைகளை மோகன்லால் நன்கு அறிந்தவர் : நடிகை மல்லிகா சுகுமாறன்
“திமுக கூட்டணி உடையுமா?” : எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில்!