வைஃபை ஆன் செய்ததும் வருகிற ஆகஸ்ட் 16 அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் பற்றிய பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றை பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்று அறிவித்திருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென அதை மாற்றி ஆகஸ்ட் 16ஆம் தேதி அவசர செயற்குழு கூட்டமாக கூட்டி இருக்கிறார். இந்த அவசர செயற்குழு கூட்டம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என அனைத்து தரப்பு நிர்வாகிகளும் கலந்து கொள்ளும் விரிவான செயற்குழுவாக அமையும் என்கிறார்கள் அதிமுக தரப்பில்.
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுப்பதற்கு இந்த கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது. அந்த வியூகங்களில் ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது பற்றிய விவாதமும் உண்டு என்று சொல்கிறார்கள் அதிமுகவின் சீனியர்கள்.
ஏற்கனவே ஜூலை முதல் வாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுகவின் சீனியர் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் சட்டமன்ற தேர்தலுக்குள் பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்கலாம் என்று கட்சியிலேயே சிலர் விரும்புகிறார்கள் என்று எடுத்துரைத்துள்ளனர் ஆனால் அதற்கு எடப்பாடி பிடி கொடுக்கவில்லை.
இந்த நிலையில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டத்திற்கு முன்பாகவே இந்த விஷயத்தில் பன்னீர் செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே சமரசம் எட்டப்படுவதற்கான முயற்சிகள் தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக முன்னாள் அமைச்சரும், தலைமை கழக செயலாளருமான எஸ்.பி. வேலுமணி இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்துக்கு எந்த பிரச்சனையும் வராமல் அதே நேரம் பன்னீர்செல்வத்தை உள்ளே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
’கட்சியை நாம வெற்றிகரமா நடத்திக்கிட்டு இருக்கோம். அதே நேரம் தொடர்ந்து கட்சியை மட்டும் நடத்தி என்ன பயன்? ஆட்சியை நடத்துவதுதான் நம்ம இலக்கு. 2026 சட்டமன்றத் தேர்தலில் தேர்தலை எதிர்கொள்வதில் திமுக கூட்டணி இப்போது வரை வலுவாக இருக்கிறது. ஆனால் அதிமுகஅப்படி ஒரு கூட்டணியை அமைக்க வாய்ப்புகள் இருந்தாலும் கூட்டணிக்கு வருபவர்கள், ‘முதலில் உங்கள் கட்சியில் இருக்கும் பிரிவுகள் எல்லாம் மறந்து நீங்கள் கூட்டணியாகுங்கள்’ என்ற மனநிலையில் தான் இருக்கிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் நம்மிடம் தான் இருக்கிறார்கள் என்று நாம் சொல்வது உண்மைதான்.
அதே நேரம் மக்கள் மத்தியில் அதிமுக உடைந்திருக்கிறது, பிளந்து கிடக்கிறது என்ற ஒரு எண்ணம் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கடந்த எட்டு வருடங்களாக தொடர்ந்து விதைக்கப்பட்டு அது வளர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் பன்னீருக்கும் சசிகலாவுக்கும் பெரிய அளவு செல்வாக்கு இல்லை என்றால் கூட அவர்கள் வெளியே இருக்கும் வரை அதிமுக உடைந்திருக்கிறது என்ற மக்களின் கருத்தை நம்மால் மாற்ற முடியாது. எனவே அவர்களை மீண்டும் கட்சிக்குள் அழைத்து வருவதுதான் சரியாக இருக்க முடியும்’ என்று கருதுகிறார் வேலுமணி.
அதிமுக ஒன்றுபட சர்வபரி தியாகத்திற்கும் தயாராக இருப்பதாக பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். அவரிடம் வேலுமணி தரப்பில் எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் சேர வேண்டும் என்று எடுத்து சொல்லப்பட்டிருக்கிறது.
முதலில் கட்சிக்குள் வாருங்கள், மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் பன்னீர் செல்வத்திற்கு வேலுமணி தரப்பிலிருந்து சில தகவல் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன.
இது குறித்து எடப்பாடி பழனிசாமியிடமும் தொடர்ந்து வேலுமணி விரிவாக பேசி வருகிறார். ஆகஸ்ட் 16ஆம் தேதி அவசர செயற்குழு கூட்டத்துக்கு முன்பாகவே… இந்த விவகாரத்தில் இறுக்கமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை சற்று இளக வைப்பது என்பதில் வேலுமணி தீவிரமாக இருக்கிறார்.
அதே நேரம் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் மீண்டும் சேர வேண்டும் என்ற டிமாண்டுக்கு ஓபிஎஸ் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் கூறுகிறார்கள்.
’கட்சி நடத்திக் கொண்டே இருக்கலாம். ஆனால் ஆட்சியை நடத்த வேண்டும். 2026 என்னும் அரிய வாய்ப்பை நாம் விட்டு விட்டால் அதிமுகவை எதிரிகள் வேட்டையாடி விடுவார்கள்’ என்பது தான் வேலுமணியின் கருத்தாக இருக்கிறது. அந்த அடிப்படையில் அவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீருக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறார் என்கிறார்கள் கொங்கு அதிமுக வட்டாரங்களில்” என்கிற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.