தமிழகத்தில் இன்று சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 5.30 மணிஅளவில், வடதமிழக பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, இன்று (04-12-2025) காலை 08.30 மணி அளவில் மேலும் வலுவிழந்தது.
7 நாட்களுக்கான மழை நிலவரம்
தமிழகத்தில் இன்று (டிசம்பவர் 4) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் நவம்பர் 6 முதல் 10ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மழை நிலவரம்
தலைநகர் சென்னையை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என கூறப்பட்டுள்ளது.
