பள்ளி நிர்வாகத்தின் மேல் தவறு இருந்தால் நடவடிக்கை: கள்ளக்குறிச்சி ஆட்சியர்!

Published On:

| By admin

கள்ளக்குறிச்சி மாணவி இறப்பிற்கு நியாயம் கேட்டு நடைபெற்ற கலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

ADVERTISEMENT

மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கடந்த நான்கு நாட்களாக மாணவியின் தாயார், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இன்று (ஜூலை 17) மாணவிக்கு நீதி கேட்டு மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. இதில் போலீஸ் அதிகாரிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.

இந்த கலவரம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கூறுகையில், “கலவரம் நடைபெறும் பள்ளிக்கு அருகாமையில் உள்ள சின்னசேலம் மற்றும் நயினார்பாளையம் ஆகிய இரண்டு தாலுக்காவிற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. உள்ளூர் காவல் அதிகாரிகளுடன் சேர்ந்து விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து கூடுதல் காவல் அதிகரிகள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

ADVERTISEMENT

கலவரத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் முதன்மை காரியம் என்பதால் காவல் துறை துணையுடன் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து விசாரணை நடத்தி முறையான நடவடிக்கை எடுக்கப்படும்.  

ADVERTISEMENT

மாணவி இறந்த சம்பவம் நிகழ்ந்த நாளிலிருந்து காவல் துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் சிசிடிவி காட்சி மற்றும் உடல் கூராய்வின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஆகியவற்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முறையான விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவம் நடந்த பிறகும் உடற்கூராய்வின் போதும் மாணவியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்கள், முறையான விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகத்தின் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதன்படி பள்ளி நிர்வாகத்தின் மேல் தவறு இருப்பது தெரியவந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே பொதுமக்கள் விசாரணைக்கு ஒத்துழைத்து கலவரத்தில் ஈடுபடாமல் பொறுமை காக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மோனிஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share