பட்டாசு ஆலை வெடி விபத்து: மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

Published On:

| By Monisha

மதுரை திருமங்கலம் அருகே இன்று (நவம்பர் 10) ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து இடத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமத்தில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான விடிஎம் என்ற பட்டாசு ஆலை 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பணிக்குச் செல்கின்றனர்.

இன்று (நவம்பர் 10) மதியம் பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமாக மருந்துகள் உராய்ந்து வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் 3 கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. அதில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள், திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் அம்மாசி, வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த பட்டாசு ஆலை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த நிலையில் தலைமறைவாகியுள்ள ஆலையின் உரிமையாளர் அக்‌ஷயா தேவி மற்றும் அனுசுயா தேவியை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த பயங்கர விபத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது

மோனிஷா

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை: தமிழக அரசு சட்டத்தை எதிர்த்து வழக்கு!

10% இடஒதுக்கீடு: இறுதி தீர்ப்பை காங்கிரஸ் ஏற்கும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share