இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்திற்குத் திரைப்பட விநியோகஸ்தர்கள் நெருக்கடி தரவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக ரஜினி படங்கள் தோல்வி அடைந்தால் அதன் நஷ்ட ஈட்டைக் கேட்டு விநியோகிஸ்தர்கள் ரஜினி வீட்டு வாசலை முற்றுகையிடும் சம்பவங்களை கடந்த காலங்களில் பார்த்திருப்போம்.
ஆனால், தற்போது ரஜினி நடித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘தர்பார்’ படத்தின் நஷ்ட ஈட்டை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸிடம் அப்படத்தின் விநியோகிஸ்தர்கள் கேட்கவுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து 2020-ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் ‘தர்பார்’. இந்தப் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால், நஷ்டமடைந்த விநியோகிஸ்தர்கள் அப்போதே அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸிடம் முறையிட்டனர்.
அப்போது, அடுத்துத் தயாரிக்கும் ரஜினி படத்தில் இந்த நஷ்ட ஈட்டைத் தருகிறோம் என லைகா புரொடக்ஷன்ஸ் வாக்குறுதி தந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது லைகா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்கும் ரஜினி படமான ‘வேட்டையன்’ படத்தின் ரிலீஸுக்கு முன்னர் இதுகுறித்து அந்தத் தயாரிப்பு நிறுவனத்திடம் முறையிட விநியோகஸ்தர்கள் திட்டமிட்டு வருவதாக திரைத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
’ஜெய் பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் சராசரி ரஜினி படமாக மட்டும் இல்லாது, கல்வி மாஃபியா, என்கவுண்டர் போன்ற விஷயங்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விவாதிக்கவுள்ளதாக படத்தின் டீசர், டிரெய்லர் மூலம் தெரிகிறது.
இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ராணா, ஃபஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், அபிராமி, துசாரா விஜயன் உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ வெளியிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்… எப்போது தெரியுமா?
மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
