தகுதிநீக்கத்திற்கு எதிராக வினேஷ் போகத் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நாளை (ஆகஸ்ட் 11) இரவு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் நாளையுடன் நிறைவடைய உள்ளது. இதற்கிடையே 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகம் காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். சர்வேதச ஒலிம்பிக் கமிட்டியின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதே நேரம் அமெரிக்கா வீராங்கனை சாராவுக்கு தங்கமும், அரையிறுதியில் வினேஷிடம் தோற்ற கியூபா வீராங்கனை லோபஸ் வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது.
இதனால் துவண்டு போன வினேஷ் போகத் தனது ஓய்வை அறிவித்த அதே வேளையில், தகுதி நீக்கத்தை எதிர்த்தும், தனக்கு வெள்ளி பதக்கம் வழங்கக் கோரியும் சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடந்த நிலையில் வினேஷ் போகத் தரப்பும் – உலக மல்யுத்த அமைப்பும் தங்களது வாதங்களை முன் வைத்தன. அதனையடுத்து இன்று இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதனை ஒட்டுமொத்த விளையாட்டு உலகமும் எதிர்நோக்கி இருந்த நிலையில், இறுதித்தீர்ப்பு வழங்கப்படுவதற்கான கால அவகாசத்தை இந்திய நேரப்படி நாளை இரவு 9.30 மணி வரை சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
நாளையுடன் பாரிஸ் ஒலிம்பிக் நிறைவடையும் நிலையில், வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா என்பதற்கான பதிலுக்கும் நாளை வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: மீண்டும் ஓபிஎஸ்? வேலுமணி நடத்தும் அவசர ஆபரேஷன்!