முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆருக்கு சொந்தமான திருச்சியில் உள்ள ரூ.25 கோடி மதிப்புள்ள பங்களாவின் பட்டா சட்டவிரோதமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. dispute over mgr trichy property
திருச்சி மாவட்டம் வடக்கு காட்டூர் காந்தி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சர்வேயர் சார்லஸ் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் ஜூன் 9 அன்று அளித்த மனுவில்,
“முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு திருச்சி உறையூர் திருத்தாந்தோணி சாலையில் 80,000 சதுர அடி நிலத்துடன் சுமார் ரூ.25 கோடி மதிப்பீட்டில் பங்களா இருக்கிறது.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, அவரது மூத்த சகோதரர் சக்ரபாணியின் மகன் மற்றும் மகள்கள் 10 பேர் எம்ஜிஆரின் சட்டப்பூர்வ வாரிசுகளாகப் பதிவு செய்து இந்த சொத்துக்கு பட்டா பெற்றனர். ஆனால், திருச்சியில் உள்ள பங்களாவின் சொத்து எம்ஜிஆரின் சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்கள் நீக்கப்பட்டு, அதிமுக பொதுச் செயலாளர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு, அந்த பெயரும் நீக்கப்பட்டு தனிப்பட்ட நபரான மதுரம் கணவர் கோவிந்தசாமி என்ற பெயரில் கணினி நிலப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) உத்தரவைப் பெற்ற பின்னரே எம்.ஜி.ஆரின் சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களை நிலப் பதிவேடுகளில் இருந்து நீக்க முடியும். ஆனால், இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

இதுதொடர்பாக, திருச்சி ஆர்.டி.ஓ.விடம் மேல்முறையீடு செய்தேன். இதனையடுத்து, அக்டோபர் 1, 2021 மற்றும் அக்டோபர் 18, 2021 ஆகிய தேதிகளில் இரண்டு முறை என்னிடம் விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில், தனிப்பட்ட நபரான மதுரம் கணவர் கோவிந்தசாமி என்ற பெயரும் நீக்கப்பட்டு, தற்போது கணினிமயமாக்கப்பட்ட நிலப் பதிவேடுகளில் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலம் வாங்கும் ஆவணத்தின் நகலை இந்த மனுவுடன் இணைத்துள்ளேன். எம்ஜிஆர் தனது சொத்தை அதிமுகவிற்கு ஒரு ஆவணம் மூலம் நன்கொடையாக அளித்தாரா அல்லது இது தொடர்பாக ஏதேனும் உயில் எழுதினாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
நிலப் பதிவேடுகளை ஆய்வு செய்து, ஆர்.டி.ஓ.வின் விசாரணையையும், அவரது உத்தரவையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வறுமையில் வாடும் எம்.ஜி.ஆரின் சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களை நிலப் பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். dispute over mgr trichy property