அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு : அமலாக்கத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On:

| By Pandeeswari Gurusamy

Disproportionate assets case against I. Periyasamy.

சொத்துக்களை முடக்கம் செய்ய அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீஸ்க்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்த வழக்கில் ஜனவரி 5ம் தேதி அமலாக்கத்துறை பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார். 2006 – 2010 வரையிலான காலகட்டத்தில் வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் அளவிற்கு சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி சுசீலா மகன்கள் செந்தில்குமார் மற்றும் பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் விடுவித்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அவரது மனைவி சுசீலா மகன்கள் செந்தில்குமார் பிரபு ஆகியோரை விடுவித்து திண்டுக்கல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் மீண்டும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணை நடத்தி ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது. மேலும் சொத்துக்களை முடக்குவது தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனு இன்று (டிசம்பர் 17) சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஐ.பெரியசாமிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் வரும் ஐனவரி 5 தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்த மனு தொடர்பாக அன்றைய தினம் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share