டிஸ்னி இந்திய நிறுவனம் தனது ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் மற்றும் ஸ்டார் நெட்வொர்க் தொலைக்காட்சி வணிகத்தை விற்பனை செய்ய இந்திய கோடீஸ்வரர்களான கௌதம் அதானி மற்றும் சன் குழுமம் நிறுவனர் கலாநிதி மாறன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சில செய்திகள் வெளியாகி இருக்கிறது.
ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூலமாக தொடங்கப்பட்ட ஜியோ சினிமாஸ் ஸ்ட்ரீமிங் தளத்தினால் இந்திய சந்தையில் டிஸ்னிக்கு மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் டோர்னமெண்டிற்கான டிஜிட்டல் உரிமைகள் முன்னதாக டிஸ்னியிடம் இருந்தது.
ஆனால் ஜியோ சினிமாஸை தொடங்கி ஐபிஎல் கிரிக்கெட் டோர்னமெண்ட் டிஜிட்டல் உரிமைகளை பெற்று அதை இலவசமாக பார்க்கலாம் என்று முகேஷ் அம்பானி அறிவித்தார்.
இந்த அறிவிப்பினால், டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஏப்ரல் ஜூன் காலாண்டில் மட்டும் 12.5 மில்லியன் பேயிடு சப்ஸ்கிரைப்பர்களை இழந்துவிட்டது.
மேலும் Warner Bros Discovery Inc., HBO ஸ்ட்ரீமிங் உரிமைகளையும் ஜியோ சினிமாஸ் வாங்கி விட்டதாலும், டிஸ்னி நிறுவனம் இந்திய சந்தையில் மிகப்பெரிய சரிவை சந்திக்க தொடங்கி விட்டது.
டிஸ்னி இப்போது ரிலையன்ஸின் பிளே புக்கை பயன்படுத்தி, தற்போது நடந்துவரும் கிரிக்கெட் உலகக் கோப்பையை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்கிறது.
டிஸ்னி நிறுவனத்தின் இந்த செயல் அவர்களுக்கு வருவாயை ஈட்டி தரவில்லை என்றாலும், சப்ஸ்கிரைப்பர்களை அதிகப்படுத்தும் என்ற நோக்கத்தில் இந்த செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துடன், ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் மற்றும் ஸ்டார் நெட்வொர்க் தொலைக்காட்சி வணிக சொத்து விற்பனை குறித்து டிஸ்னி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்,
ஆனால் அந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியவில்லை என்றும் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தற்போது டிஸ்னி நிறுவனம் தங்களுடைய ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் நெட்வொர்க் உரிமைகளை விற்பதற்காக இந்திய கோடீஸ்வரர்களான அதானி குழுமம் நிறுவனர் கௌதம் அதானி மற்றும் சன் குழுமம் நிறுவனர் கலாநிதி மாறன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தை ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது என்றும் இது வெற்றியடையாமல் போக அதிக வாய்ப்புள்ளது என்றும் சில தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
ஒருவேளை டிஸ்னி நிறுவனத்துடனான இந்த பேச்சுவார்த்தை சன் குழுமம் நிறுவனத்துடன் வெற்றிகரமாக ஒப்பந்தமானால் தொலைக்காட்சி துறையில் ஒரு தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி விடுவார் கலாநிதி மாறன்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
‘நான் நிரூபிக்கவா’ , “யாருக்கு துணிச்சல் இல்லை’ : ஸ்டாலின் -எடப்பாடி காரசார விவாதம்!