பேரிடர் நிவாரண நிதி: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி!

Published On:

| By Monisha

பேரிடர் மீட்புப் பணிகளுக்காக 22 மாநில அரசுகளுக்கு ரூ.7,532 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280-ன் கீழ் நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. மழை, வெள்ளம் உள்ளிட்ட வகையான 12 பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான செலவினங்களை எதிர்கொள்வதற்காக இந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது.

சமீபத்தில் பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், நேற்று 22 மாநில அரசுகளுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.7,532 கோடியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

22 மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள நிதியில் அதிகபட்சமாக மராட்டியத்துக்கு ரூ.1,420.80 கோடியும், உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.712 கோடியும், ஒடிசா மாநிலத்துக்கு ரூ.707.60 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி பேரிடர் காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க பெரிதும் உதவும். அதேபோல் பேரிடர் காலத்தை எதிர்கொள்ள உதவிக்கரமாக இருக்கும்.

வட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால், வழிகாட்டு நெறிமுறைகள் தளர்த்தப்பட்டு, கடந்த நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகையின் பயன்பாட்டுச் சான்றிதழுக்காகக் காத்திருக்காமல், மாநிலங்களுக்கு உடனடி உதவியாகத் தொகை வெளியிடப்பட்டுள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: ஆலு ஸ்டஃப்டு சப்பாத்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share