மத்திய பாஜக அரசு பேரிடர் நிவாரண நிதியிலும் தமிழ்நாட்டை புறக்கணித்திருப்பது பேசு பொருளாகி உள்ளது. Disaster Relief Fund
பாஜக ஆளும் மாநிலங்கள், பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் பாஜக அரசு தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய சுமார் 2000 கோடியை கூட பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் மட்டுமே தருவோம் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது. தமிழகத்தில் இதற்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
இது ஒருபுறமிருக்க பேரிடர் நிவாரண நிதியை தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் தற்போது வரை நிதி ஒதுக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு இறுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்கள் கடும் சேதமடைந்தன. ஃபெஞ்சல் புயல் பாதிப்பிலிருந்து மீண்டு வர தமிழ்நாடு ரூ.37 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசிடம் கேட்டது.
தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்காத நிலையில் இன்று ஐந்து மாநிலங்களுக்கு கூடுதலாக பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த முறையும் தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்துள்ளது.
வயநாடு நிலச்சரிவு காரணமாக கேரளா மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. தமிழ்நாட்டைப் போலவே கேரளாவுக்கும் இந்த பட்டியலில் இடமளிக்கப்படவில்லை.
கடந்த 2024ஆம் ஆண்டு புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1,554.99 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆறு மாநிலங்களுக்கு ரூ.1,554.99 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட ஆந்திர பிரதேசம், ஒடிசா, தெலங்கானா, நாகாலாந்து, திரிபுரா, ஆகிய மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1554.99 கோடி பேரிடர் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இது குறித்து அமித் ஷா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இன்று மத்திய அமைச்சரவையின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் கூடுதல் மத்திய அரசின் உதவியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ஆந்திர பிரதேசம், நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு 1554.99 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது ஏற்கனவே ரூ. 18,322.80 கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 27 மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிலையில், இது கூடுதல் நிதியாகும்” என்று பதிவிட்டுள்ளார்.
ஆந்திர பிரதேசம் ரூ.608.08 கோடி, நாகாலாந்து ரூ.170.99 கோடி, ஒடிசா ரூ.225.24 கோடி, தெலங்கானா ரூ.231.75 கோடி, திரிபுரா ரூ.288.93 கோடி என்ற அளவில் கூடுதல் நிதி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
—