எனக்கும் சித்தராமையாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலில் 135 இடங்களில் அமோக வெற்றி பெற்றிருக்கிறது காங்கிரஸ். தற்போது அடுத்த முதல்வர் யார் என்ற யூகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, சித்தராமையா சந்தித்து பேசியுள்ளார்.
மறுபக்கம் டி.கே.சிவக்குமார், சித்தராமையா என இரு தலைவர்களின் ஆதரவாளர்களுமே தங்கள் தலைவர்தான் அடுத்த முதல்வர் என போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்தசூழலில் இன்று (மே 14) தும்கூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், “கட்சிக்காகப் பல தியாகம் செய்திருக்கிறேன். சித்தராமையாவுடன் நின்றிருக்கிறேன். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறேன். தொடக்கத்தில் என்னை அமைச்சராக்காதபோது பொறுமையாக இருந்தேன் அல்லவா?.
எனக்கும் சித்தராமையாவுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால் அப்படி எந்த வேறுபாடும் எங்களுக்குள் கிடையாது” என்று கூறியுள்ளார்.
கனகபுரா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் பி நாகராஜுவை 1,22,392 வாக்குகள் வித்தியாசத்தில் டிகே சிவக்குமார் தோற்கடித்தார். அதுபோன்று சித்தராமையா வருணா தொகுதியில் (பாஜக) வேட்பாளர் சோமன்னாவை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
