பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாற்றுத்திறனாளிகளை போலீசார் இன்று (ஏப்ரல் 22) கைது செய்தனர். Disabilities arrested secretariat rally
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை காமராஜர் சாலையில் உள்ள எழிலகத்தில் இருந்து தலைமை செயலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் இன்று முயன்றனர்.

இதனையடுத்து, அங்கு குவிந்திருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர்.
மேலும், இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை வந்த மாற்றுத்திறனாளிகள் கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர். சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை நடைபெற்று வரும் இந்த சூழலில், மாற்றுத்திறனாளிகள் போராட்டம் தலைநகர் சென்னையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், காவல்துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான கொள்கை, ஸ்மார்ட் கார்டு, மூன்று சக்கர மோட்டார் வாகனம், வீட்டுவசதி வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீடு என தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாத திமுக அரசு, தங்களின் வாழ்வாதார பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அதிலும், 100 நாள் வேலைத்திட்டத்தில் 50 சதவிகிதம் பணி மற்றும் 4 மணி நேரம் என்று இருந்த வேலையை, 8 மணி நேரம் வேலை மற்றும் நாள் முழுவதும் பணித்தளத்தில் இருக்க வேண்டும் என மாற்றி உத்தரவு பிறப்பித்திருப்பது ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளுக்கும் திமுக அரசு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம் ஆகும்.
எனவே, காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். Disabilities arrested secretariat rally