இயக்குனர் வெற்றிமாறனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் என்றால் அது வேல்ராஜ் தான். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன், விடுதலை என தொடர்ந்து வெற்றிமாறன் படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றவர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.
ஒளிப்பதிவாளராக பல படங்களில் இவர் பணியாற்றி இருந்தாலும் இவருக்குள் இருந்த இயக்குனரை வெளியுலகிற்கு காட்டிய படம் நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி. அம்மா மகன் சென்டிமென்ட், அப்பா மகன் சென்டிமென்ட், காமெடி, காதல், என அனைத்தையும் சரியான மீட்டரில் காட்சிப்படுத்தி நடிகர் தனுஷுக்கு மறக்க முடியாத ஒரு வெற்றி படமாக வேலையில்லா பட்டதாரி படத்தை கொடுத்தார் வேல்ராஜ்.
வேலையில்லா பட்டதாரி படத்திற்குப் பிறகு மீண்டும் நடிகர் தனுஷ் நடிப்பில் வேல்ராஜ் இயக்கிய தங்க மகன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு அவர் முழுக்க முழுக்க ஒளிப்பதிவாளராக மட்டுமே இதுவரை பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டுருக்கிறார் வேல்ராஜ். வேல்ராஜின் இந்த புதிய படத்தில் நடிகர் சசிகுமார் ஹீரோவாக நடிக்க உள்ளார். அசுர குரு, மெர்லின் போன்ற படங்களை தயாரித்த ஜேஎஸ்பி சதீஷ், வேல்ராஜ் – சசிகுமார் கூட்டணியில் உருவாக உள்ள படத்தை தயாரிக்கின்றார். கூடிய விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
