இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரனுக்கு சிறந்த நடிகர் விருது

Published On:

| By Minnambalam Desk

Director SA Chandrasekhar

திரை உலகில் 45 ஆண்டுகளாகத் தயாரிப்பாளர், இயக்குநர் என்று இயங்கி வருபவர் எஸ் ஏ சந்திரசேகர்.

அவள் ஒரு பச்சைக் குழந்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, விஜயகாந்தின் சட்டம் ஒரு இருட்டறை மூலம் வெற்றிப்பட இயக்குனர் ஆனவர்.

ADVERTISEMENT

கேப்டன் விஜயகாந்தின் வெற்றிகளுக்கு பலமான அஸ்திவாரம் போட்டவர். ரஜினிக்கு ஒரு முக்கியமான சூழலில் மாபெரும் வெற்றிப் படமான நான் சிகப்பு மனிதனைக் கொடுத்தவர்.

சட்டம் சம்மந்தப்பட்ட பல படங்களை எடுத்தவர் . நடிகர் விஜய்யை உருவாக்கிய தந்தை .

ADVERTISEMENT

விஜய்க்கு தன் மகனோடு விஜயகாந்தை நடிக்க வைத்து செந்தூர பாண்டி என்ற படத்தைத் தந்தது போலவே நடிகர் சூர்யாவுக்கும் விஜய் காந்தை உடன் நடிக்க வைத்து பெரியண்ணா என்ற படத்தைத் தந்தவர்.

பல வெற்றி படங்களைத் தந்தவர். அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் இயக்கியவர்.

ADVERTISEMENT

ஷங்கர், செந்தில் நாதன், பவித்ரன், மஜீத். பொன்ராம், எம் ராஜேஷ் என்று பல இயக்குனர்களின் குருநாதர்.

விஜய்யை நடிப்பில் மட்டுமல்லாது அரசியல் நோக்கியும் திருப்பி விட்டவர். அந்த அரசியலின் வளர்ச்சி தான் நினைத்தது போல இல்லாத போதும் அதை வெளிக்காட்டாமல் இருப்பவர். இந்த வயதிலும் சினிமாவில் ஆர்வமாக இயங்கி கொண்டு இருப்பவர்.

இவருக்கு கல்கத்தா சினிமா அமைப்பின் சார்பில் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

இது பற்றி நெகிழ்ச்சியோடு பேசும் அவர் “தயாரிப்பாளராக, இயக்குநராக நான் பணியாற்றிய நான் இப்போது நடிகராகவும் இருக்கிறேன்.

சினிமாவில்நான் ஓய்வெடுக்க நினைத்தாலும் அது முடிவதில்லை. சினிமா ஒரு காற்று போன்றது. எப்போதும் அதை நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் நடித்த திரைப்படங்களில் ‘கூரன்’ என்ற படத்தில் நடித்தது, அதிலும் ஒரு நாயுடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். அது ஒரு நாய்க்கும் மனிதருக்குமான பாசம் சம்பந்தப்பட்ட கதை . அந்த வகையில் அந்தப் படத்தில் நடித்தது ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது.

‘கூரன்’ படத்தில் நடித்ததற்காக எனக்கு சிறந்த நடிகர் என்ற ஒரு விருது கிடைத்துள்ளது. ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பினர் இணைந்து இந்த விருதை எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.

சினிமாவில் அன்பைப் பற்றிச் சொல்லப்படுவதற்காக ‘சினிகைண்ட்’ என்கிற அந்த விருது வழங்கப்படுகிறது.அந்த விருதைப் பெற்றுக் கொள்ளும்படி எனக்கு அழைப்பு வந்தது.

கொல்கத்தாவில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் எனக்கு விருதை வழங்கினார்கள் .நான் எனது மனைவியோடும் மகிழ்ச்சியோடும் அந்த விழாவில் கலந்து கொண்டு விருதினைப் பெற்றுக் கொண்டேன்.சினிமாவில் நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடும் உழைப்பை வழங்கினால் அது நமக்குப் பெருமையையும் அங்கீகாரத்தையும் தேடித் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று நான் சொல்வேன்.”என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார்.

இன்னும் அங்கீகாரங்கள் வரட்டும்

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share