இயக்குநர் முத்தையா மகன் விஜய் முத்தையா ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் பூஜை இன்று (பிப்ரவரி 22) நடைபெற்றது.
கடந்த 2013-ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான ‘குட்டிப் புலி’ படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் முத்தையா.
இந்த 11 ஆண்டுகளில் கார்த்தி நடிப்பில் ‘கொம்பன்’, விஷால் நடிப்பில் ‘மருது’, சசிகுமார் நடிப்பில் ‘கொடிவீரன்’, கவுதம் கார்த்தி நடிப்பில் ‘தேவராட்டம்’, விக்ரம் பிரபு நடிப்பில் ‘புலிக்குத்தி பாண்டி’, கார்த்தி நடிப்பில் ‘விருமன்’, ஆர்யா நடிப்பில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இந்தநிலையில் இயக்குநர் முத்தையா தன்னுடைய அடுத்த படத்தில் மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக அறிமுகம் செய்துள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று காலை மதுரையில் நடைபெற்றது.
இதில் விஜய் முத்தையா, முத்தையா மற்றும் படத்தின் நாயகிகளான தர்ஷினி, பிரிகிடா சாகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை எம். சுகுமார் கவனிக்க, வெங்கட்ராஜூ படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கும் இப்படத்திற்கு, கலை இயக்குநராக வீரமணி கணேசன் ஒப்பந்தமாகி உள்ளார்.
வழக்கம்போல கிராமத்து பின்னணி தான் படத்தின் கதையாம். மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் ஷூட்டிங் நடத்திட படக்குழு திடமிட்டுள்ளது. ஆக்ஷன் மற்றும் காதல் என கிராமத்து பின்னணியில் இப்படத்தின் கதையை முத்தையா எழுதி இருக்கிறாராம்.
கமர்ஷியல் படங்களை இயக்குவதில் முத்தையா தேர்ந்தவர் என்பதால் விஜய் முத்தையா நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்பொழுதே தொடங்கி விட்டது. விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இன்று வெளியாகிறது ஐபிஎல் அட்டவணை… முதல் போட்டி எங்கேன்னு பாருங்க!
கலைஞர் நினைவிடம் திறப்பு: அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்