ஞானவேல் ராஜாவின் வார்த்தைகள் பொய்யானது: சேரன் குற்றச்சாட்டு!

Published On:

| By Selvam

director cheran condemn gnanavel raja

அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் வார்த்தைகள் முற்றிலும் பொய்யானது என்று இயக்குனர் சேரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீர் குறித்து விமர்சனம் செய்ததற்கு பாரதிராஜா, சமுத்திரகனி, சசிகுமார், பொன் வண்ணன், கரு.பழனியப்பன், சிநேகன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அமீர் குறித்த தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக ஞானவேல் ராஜா அறிக்கை வெளியிட்டார்.

இருப்பினும் ஞானவேல் ராஜா பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமுத்திரக்கனி, சசிகுமார் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் இயக்குனர்கள் சேரன் மற்றும் நந்தா பெரியசாமி ஆகியோர் அமீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் சேரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமீர். மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு. காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே.

திமிராய் இரு நீயின்றி அவர்களில்லை என்ற கர்வம் மட்டும் போதும். உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா கலங்கத்தையும் துடைக்கும்.

ஞானவேல் ராஜா, படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள். அமீரின் நேர்மையையும், உண்மையும், நாணயமும் நான் நன்கறிந்தவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது.

கண்டிக்கிறேன் உங்களை. கார்த்தியும் சூர்யாவும் உங்களை இந்நேரம் உம் தவறை கண்டித்திருக்கவேண்டும்” என்றார்.

இயக்குனர் நந்தா பெரியசாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருத்தி வீரன் படத்தில் முத்தழகிற்கு நடந்த கொடுமையை விட மிகப்பெரிய வன்முறையை அதன் இயக்குநர் அமீருக்கு நடத்தியிருக்கிறார்கள்.

கார்த்தி என்ற பருத்திவீரனை நம்பிய முத்தழகின் முடிவு வேண்டுமானால் துயரத்தில் முடியலாம். இயக்குநர் அமீருக்கு அப்படியல்ல. அவர் இன்னும் வீறு கொண்டு எழுவார். படைக்கு அஞ்சாத அவருக்கு கை கோர்க்க தம்பிமார்கள் பலரும் இருக்கிறோம்.

தொழுகை தவறாத அவர் அருகே இறைவனும் சத்தியமும் இருக்கிறது. பகைவனுக்கும் அருள்கின்ற அவர் புன்னகை இன்னும் அவரை பலமாக்கும். துரோகமற்ற பல பருத்தி வீரன்களை அவர் இனி தொடர்ந்து படைப்பார். மாசற்ற ஒரு அற்புதமான மனிதனுக்காக நாம் ஒன்று கூடுவோம். அவர் பக்கம் துணை நிற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: வெஜ் – ஹெல்த் சூப்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share