தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
சக இயக்குநர்கள், திரைகலைஞர்கள் சம்பந்தபட்ட நல்ல திரைப்படங்களை சம்பிரதாயமாக இல்லாமல் தர்க்க நியாயங்களுடன் விமர்சிப்பது, பாராட்டுவது தொடங்கியுள்ளது.
இதனை வழக்கம் போல நடிகர் கமலஹாசன் கொட்டுக் காளி படத்திற்கான விமர்சன கடிதம் ஒன்றை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 23) வெளியான வாழை படத்தை தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குநர்களான மணிரத்னம், பாலா போன்றவர்கள் பாராட்டியது, சமூக வலைதளங்களில் வாழை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.
அதனால் பிரபல நட்சத்திரங்கள் நடித்திராத வாழை படம் வெளியான திரையரங்குகளில் 60% டிக்கெட்டுகள் விற்பனையானது.
வாழை படத்தை கண்கள் கலங்க இயக்குநர் மாரி செல்வராஜை கட்டித் தழுவி முத்தமிட்டு பாராட்டிய இயக்குநர் பாலா கொட்டுக்காளி படத்தை பாராட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நம்முடைய தமிழ் திரைப்படத்துறையில் இருந்து, உலகம் வியக்கும் கலைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதற்கான முக்கியமான சான்றுகளில் ஒன்று, இந்தக் கொட்டுக்காளி.
ஆழமான இக்கதையை, எளிமையாகவும் வலிமையாகவும் எடுக்க முடியும் என்று களமாடி, ஓர் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் வினோத்ராஜ்.
குறிப்பாக, சூரி தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து, ஆர்ப்பாட்டமும் அமைதியும் ஒரு சேர இணைந்த நடிப்பை வெளிப்படுத்தி, ஒரு நடிகராகத் திரையுலகில் ஆழ்ச்சுவடு பதித்து தாண்டவமாடியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
படத்தின் தலைப்பிற்கே நியாயம் சேர்க்கும் வகையில், மிக அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் நாயகி, அனா பென். படத்தில் நடித்திருக்கும் அனைவருமே, தாங்களும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரம்தான் என்று சவால்விட்டிருக்கிறார்கள்.
காட்சியை வழி நடத்திச் சென்ற ஒளிப்பதிவாளர் சக்திவேல், மிகவும் போற்றுதலுக்குரியவர் சிவகார்த்திகேயனுக்கு, வினோத்ராஜ் சார்பாக, எனது நன்றிகள். சூரி மற்றும் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள். ‘கொட்டுக்காளி’ படக்குழுவினர் அனைவரும் உயர்ந்து நிற்கிறார்கள்” என பாராட்டியுள்ளார்.
இதன் மூலம் வாழை, கொட்டுக்காளி படங்களை பார்க்க வேண்டும் என்கிற மனோநிலை அனைத்து தரப்பினரிடமும் அதிகரித்து வருகிறது.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முழுமையான நிறைவான வாழ்க்கை என்றால் என்ன?
டாப் 10 நியூஸ்: முத்தமிழ் முருகன் மாநாடு முதல் ஆளுநர் டெல்லி பயணம் வரை!