ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்த மூளையாக செயல்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
ஜாபர் சாதிக் தயாரித்த இறைவன் மிகப்பெரியவன் படத்தை அமீர் இயக்கியிருந்தார். இதனையடுத்து அமீருக்கு என்சிபி சம்மன் அனுப்பியது. கடந்த வாரம் டெல்லியில் உள்ள என்சிபி அலுவலகத்தில் அமீர் ஆஜரானார்.
இந்தநிலையில், சென்னையில் நேற்று (ஏப்ரல் 9) ஜாபர் சாதிக் வீடு, அவரது கூட்டாளிகள் மற்றும் இயக்குனர் அமீரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதுகுறித்து அமீர் இன்று (ஏப்ரல் 10) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது,
“என்னுடைய வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்தினார்கள். இரவு 12 மணிக்கு தான் அமலாக்கத்துறை விசாரணை முடிந்தது.
சில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளார்கள். என்ன ஆவணங்களை பறிமுதல் செய்தார்கள் என்று அவர்களே சொல்வார்கள். அதை நான் சொன்னால் சரியாக இருக்காது.
எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன். சமூக வலைதளங்களில் என் மீது பரப்பப்படும் குற்றச்சாட்டிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிரூபிப்பேன். எப்பொழுதும் போல என்னிடம் இருந்து வரும் ஒரே வார்த்தை இறைவன் மிகப்பெரியவன்” என்றார்.
உங்கள் மீது குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமீர், “அதை நான் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், நிச்சயமாக இதுகுறித்து ஒரு நாள் பேசுவேன்.
விசாரணை இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், மேற்கொண்டு அதனை சிக்கலாக்க விரும்பவில்லை. ஆனால், என்னால் கடந்த ஒரு மாதமாக பேசமுடியவில்லை, அதுமட்டும் உண்மை.
விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது. விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. சம்மன் எதுவும் கொடுக்கவில்லை” என்று அமீர் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…