தினேஷ்- ரட்சிதா: உண்மை என்ன?

Published On:

| By Aara

நடிகை ரட்சிதா, தினேஷ் விவாகரத்து வதந்திக்கு தினேஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியின் ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரட்சிதா. இதற்கு பிறகு இவர் ‘சரவணன் மீனாட்சி’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ உள்ளிட்ட சீரியல்களில் விஜய் டிவியில் நடித்துள்ளார். இப்பொழுது அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘இது சொல்ல மறந்த கதை’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.  

இவருக்கும் நடிகர் தினேஷுக்கும் காதல் திருமணம் நடந்தது. பிறகு கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரட்சிதா விரைவில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் இருவருக்கும் விவாகரத்து நடந்து விட்டது என்றும் பல செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்திகள் குறித்து தினேஷ், ரட்சிதா இருவருமே மௌனம் காத்து வந்தனர்.

 இந்த நிலையில் நடிகர் தினேஷ் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விஷயம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெளிவு படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நானும் ரட்சிதாகவும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மைதான். ஆனால் இப்போது வரைக்குமே நானோ ரட்சிதாவோ சட்ட ரீதியாக பிரியலாம் என்று எந்த ஒரு முடிவையும் முன்னெடுக்கவில்லை. கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டைதான் இது. எங்களுக்குள் இது சரியாக சிறிது காலம் எடுக்கும். விரைவில் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன். மற்றபடி எங்களுக்குள் விவாகரத்து, ரட்சிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதெல்லாம் உண்மை கிடையாது.

என்னை விட ரட்சிதா  தைரியசாலி. அதனால் இது போன்ற தவறான வதந்திகளை எல்லாம் அவர் கண்டு கொள்ள மாட்டார்.  நானும் இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன். லைக்ஸ் வியூஸ்க்காக வரும் செய்திகள் எப்பொழுதுமே போலியானவை’ என்று கூறி அந்த பேட்டியில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தினேஷ்.

-ஆதிரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share