தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதையொட்டி காலையில் பேரவைக்கு வரும் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றத்துக்கு வெளியே கட்சி பேதம் இன்றி ஒருவருக்கு ஒருவர் சகஜமாக பேசுவதை பார்க்க முடிகிறது. Dindigul Srinivasan refuses to alliance speech
இந்தசூழலில் இன்று (மார்ச் 27) காலை அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காரில் வந்து இறங்கினார். அவருக்கு பின்னால் வந்த காரில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் வந்தனர்.
இதையடுத்து திண்டுக்கல் சீனிவாசன், ஜி.கே.மணி, அருள் என அனைவரும் ஒன்றாக சட்டமன்றத்துக்குள் சென்றனர்.
அப்போது, “பாஜக… நம்ம(அதிமுக)… பாமக” என கூறி சிரித்துக்கொண்டே பேசி வந்த திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒரு செய்தியாளர் இதுகுறித்து கேட்டதாகவும், இதற்கு அவர், “நாங்க கூட்டணிங்க” என்று சொன்னதாகவும் தகவல்கள் வந்தன.
இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்க, “நீங்க மைக்கை கொண்டு போய் நீட்டியிருப்பீர்கள். எதோ சிந்தனையில் பேசியிருப்பார். அவர் அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை” என்று பதிலளித்தார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 26) பிற்பகல் சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த திண்டுக்கல் சீனிவாசனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், “யார்க்கிட்ட சொன்னேன். நான் யார்கிட்டையும் சொல்லலையே. எடப்பாடியே சொல்லிவிட்டார். சும்மா பேசாதீங்கப்பா.. இதெல்லாம் ஒரு பொழப்பா… நான் யார்கிட்ட சொன்னேன். கேவலமாக இருக்கு. பாமகவினருடன் பேசிகிட்டு போனேன். அவ்வளவுதான். கூட்டணி குறித்து எடப்பாடியார் சொல்லிவிட்டார். நான் யாரிடமும் எதுவும் சொல்லல. நான் பொருளாளர் என்றால் அதுதொடர்பாக கேள்வி கேளுங்கள். இப்படியெல்லாம் கேட்காதீர்கள். எந்த சேனலில் நான் பேசியதாக செய்தி வந்தது. பயப்படாத சொல்லுங்கள். அமித்ஷா ட்வீட் போட்டால் அதை அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்று கூறி கூட்டணி குறித்த பேச்சுக்கு மறுப்புத் தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரும்பு மனிதர் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.