நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் திலீப் விடுதலை – 6 குற்றவாளிகள்

Published On:

| By Pandeeswari Gurusamy

கேரளாவில் ஓடும் காரில் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் குமாரை இன்று (டிசம்பர் 8) விடுதலை செய்து எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது காரில் வீட்டுக்கு திரும்பிய பிரபல நடிகையை ஒரு கும்பல் ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்ததாக நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ADVERTISEMENT

இது குறித்து கேரள காவல்துறை விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக பிரபல நடிகர் திலீப் குமார் தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடந்ததாக செய்திகள் வெளியானது.

நடிகர் திலீப் உள்ளிட்டவர்கள் மீது காவல்துறை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த வழக்கில் திலீப் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

இதில் நடிகையின் கார் ஓட்டுநர், உதவியாளர்களும் முக்கிய குற்றவாளிகள் என சேர்க்கப்பட்டனர்.

கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் குற்றம் செய்ததற்கான போதிய ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்ய தவறி விட்டதாக கூறி நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.

ADVERTISEMENT

நடிகையின் உதவியாளராக இருந்த பல்சர் குமார் உள்ளிட்ட ஆறு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் 12 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் திலீப் 85 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு வெளியான நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் திலீப், ” எனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. ஏராளமான மக்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். இந்த வழக்கால் எனது சினிமா தொழிலும், சொந்த வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. எனது பெயரை சீர்குலைக்க சிலர் முயன்றனர் மீண்டும் நியாயம் வென்றுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share