அபிஷேக் சர்மாவுடன் லக்னோ பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி மோதலையடுத்து அவரை ஒரு போட்டியில் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்தது. digvesh rathi suspended from one match by ipl
லக்னோ ஏக்னோ மைதானத்தில் நேற்று (மே 19) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வென்றதுடன், லக்னோ அணியின் பிளே ஆஃப் கனவையும் தகர்த்தெறிந்தது.
இதற்கிடையே இந்த போட்டியில் ஹைதராபாத் அணி அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா மற்றும் எல்எஸ்ஜி வீரர் திக்வேஷ் ரதி இடையே நடந்த ஆக்ரோச வார்த்தை மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
206 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ஹைதராபாத் அணிக்கு 20 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் அதிரடியாக 59 ரன்கள் குவித்து அசத்தினார் அபிஷேக் சர்மா.
அப்போது போட்டியின் 8வது ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி பந்துவீச்சில் அபிஷேக் ஷர்மாவை ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரதி தனது பிரபலமான “நோட்புக்” கொண்டாட்டத்தை செய்து, “போ, போ” என்பது போல் சைகை காட்டினார். இது அபிஷேக் ஷர்மாவை கோபப்படுத்தியது.
முதலில் சைலண்டாக இருந்த அபிஷேக் ஷர்மா ஒரு கட்டத்தில் ரதியை நோக்கி “வெளியே போ” என்பது போல் விரலை காட்டி பதிலளித்தார். இதற்கு ரதியும் அதே சைகையை திருப்பி செய்ய, அபிஷேக் ‘முடியை கொத்தாக பிடித்து வெட்டி வீசிவிடுவேன்” என்பது போல் சைகை செய்தார். நடுவர்கள் மற்றும் சக வீரர்கள் இருவரையும் பிரித்து சமாதானப்படுத்தினர்.
போட்டி முடிந்த பிறகு, இருவரும் கைகுலுக்கச் சென்ற நிலையில் மீண்டும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எல்எஸ்ஜி உதவி பயிற்சியாளர் விஜய் தஹியா மற்றும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா தலையிட்டு, இருவரையும் சமாதானப்படுத்தினர்.
ஏற்கெனவே விக்கெட் எடுத்தப்பிறகு அதனை கொண்டாடிய திக்வேஷ் ரதி சர்ச்சையில் இரண்டுமுறை சிக்கினார்.
இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக போட்டியில் சர்ச்சையில் சிக்கிய நிலையில், ஒழுங்கு நடவடிக்கையாக அவரை ஒரு போட்டியில் இருந்து நீக்கி ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ”லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மே 19 நடைபெற்ற போட்டியில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிரான போட்டியில், திக்வேஷ் ரதியின் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் பிரிவு 2.5 இன் கீழ் இது அவரது மூன்றாவது லெவல் 1 குற்றமாகும். இதன்காரணமாக அவர் மேலும் இரண்டு டிமெரிட் புள்ளிகள் பெற்றுள்ளார்.
ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 1 அன்று பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஒரு டிமெரிட் புள்ளி மற்றும் ஏப்ரல் 04 அன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் இரண்டு டிமெரிட் புள்ளிகள் பெற்றார்.
ஒரே சீசனில் ஐந்து டிமெரிட் புள்ளிகள் பெறும் வீரர் ஒரு ஆட்டத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி நடப்பு சீசனில் 5 டிமெரிட் புள்ளிகள் பெற்ற திக்வேஷ், வரும் மே 22ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லக்னோ அணியின் அடுத்த ஆட்டத்தில் திக்வேஷ் இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
அதே போன்று ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ஆல்-ரவுண்டர் அபிஷேக் சர்மாவுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் பிரிவு 2.6 இன் கீழ் இது அவரது முதல் லெவல் 1 குற்றமாகும், எனவே, அவர் ஒரு டிமெரிட் புள்ளியைப் பெற்றுள்ளார்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.