டிஜிட்டல் திண்ணை: பாஜகவின் குதிரை வேட்டை…. ‘இந்தியா’ கூட்டத்தில் ஸ்டாலின் சொன்னது என்ன?

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் டெல்லியில் ஜூன் 1ஆம் தேதி பிற்பகல் நடந்த இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தின் புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“மக்களவைத் தேர்தலில் ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 நடைபெற்று வந்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் கார்கேவின் டெல்லி வீட்டில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், திமுகவின் மக்களவை குழு தலைவர் டி. ஆர். பாலு, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பா சோரன், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் விழிப்புணர்வோடு இருப்பது பற்றியும் வாக்கு எண்ணிக்கை அன்று பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

மேலும், ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் தத்தமது மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய அப்சர்வேஷனை வெளிப்படுத்தினார்கள்.

இந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக கலந்துகொண்ட திமுக பொருளாளர் டி. ஆர். பாலு பேசும்போது, ’தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றிபெறுவோம். ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் பாஜகவை விட வேகமாக நாம் இறங்க வேண்டும். இந்தியா கூட்டணி சார்பாக வெற்றி பெற்ற எம்பிக்கள் அனைவரும் ஜூன் 4-ம் தேதி இரவுக்குள் டெல்லி வந்துவிட வேண்டும். இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஜூன் 5ஆம் தேதி அதிகாலை டெல்லியில் இருக்க வேண்டும்.

பாஜக மெஜாரிட்டிக்கு குறைவான இடங்களைப் பெற்றால் குதிரை பேரத்தை வேகமாக ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் வேட்டைக்கு இரையாகிவிடாமல், இந்தியா கூட்டணி கட்சியினரின் ஒற்றுமையை உடனடியாக நாம் குடியரசுத் தலைவருக்கு வெளிப்படுத்த வேண்டும்.

எனவே தேர்தல் முடிவுகளுக்கு பிறகான செயல்பாடுகளில் பாஜகவை விட நாம் வேகமாக இருக்க வேண்டும், இதுதான் எங்கள் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி சொல்லச் சொன்ன விஷயம். அவர் இங்கே கலந்து கொள்வதாக இருந்தது ஆனால் லேசான காய்ச்சல் காரணமாக வர இயலவில்லை. விரைவில் அவரது உடல்நிலை சரியாகி டெல்லி வருவார்’ என்று பேசியிருக்கிறார் டி.ஆர்.பாலு.

எக்ஸிட் போல் எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் கட்சி பங்கேற்பதில்லை என்று ஏற்கனவே முடிவு எடுத்திருந்தது. இந்த முடிவு பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

’நாம் நம்பிக்கையாக இருக்கிறோம். கடைசி கட்ட தேர்தல் முடிந்த பிறகும் பாஜக பற்றி மக்களிடம் நாம் தெளிவு படுத்த வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. எனவே இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தவும், தார்மீக ரீதியாக இந்தியா கூட்டணியின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தவும் இது போன்ற விவாத களத்தை நாம் நழுவ விடக்கூடாது’ என்று தலைவர்கள் வலியுறுத்தினர்.

எனவே, இந்த விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்கும் என்ற முடிவை மேற்கொண்டார் கார்கே.
இன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களிலேயே வயது குறைந்தவர் ஆர்ஜேடி கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவ் தான். ஆனால், கூட்டம் முடிந்த பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனைத்து மூத்த தலைவர்களும் நின்று கொண்டிருந்த நிலையில் தேஜஸ்வி யாதவ் மட்டும் அமர்ந்திருந்தார்.

அவருக்கு கடந்த சில மாதங்களாகவே முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக நடக்க முடியாமல் இருக்கிறார். இந்த காரணத்தால் தான் ஜூனியர் தலைவரான தேஜஸ்வி சீனியர் தலைவர்களின் தோள்களைப் பிடித்து நடந்ததோடு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அமர்ந்திருந்தார். இப்படியாக இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் தொடரும் என்பதை இந்த கூட்டம் எடுத்துக்காட்டியது.

அதே நேரம் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றுவது என்ற நம்பிக்கையில் இருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு உள்ளே நடத்தாமல், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பெரிய மாநாடு போல நடத்துவது என்று ஆலோசித்து வருகிறார்கள் பாஜக மேலிட தலைவர்கள்.

இப்படி இரு தரப்பினரும் ஜூன் 1 ஆம் தேதி மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள், மக்கள் தீர்ப்பு என்ன என்பது ஜூன் 4 ஆம் தேதி தெரியும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்: 59.45% வாக்குப்பதிவு!

Exit Polls 2024: தமிழகத்தில் முந்துவது யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share