டிஜிட்டல் திண்ணை : அமித்ஷா லிஸ்ட்டில் சீமான்… திடீரென அவர் செய்த காரியம்… அதிர்ந்த எடப்பாடி – அந்த 50 நிமிடங்கள்!

Published On:

| By Aara

digital thinnai : what happened in eps amit shah meeting

வைஃபை ஆன் செய்ததும் இன்று மார்ச் 26 டெல்லியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுடன் சந்திப்பு பற்றி அளித்த பேட்டி வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது. digital thinnai : what happened in eps amit shah meeting

அதை பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய ஆரம்பித்தது.

“மார்ச் 25ஆம் தேதி இரவு 8.15 முதல் சுமார் 10 மணி வரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் டெல்லி இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.

சுமார் 2 மணி நேரம் அவர்கள் அங்கே இருந்தாலும் அமித்ஷாவுடன் சந்திப்பு ஒரு மணி நேரம் வரை நடந்திருக்கிறது.

நாடாளுமன்ற பணிகளை முடித்துவிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மாலை ஏழு மணிக்கு மேல் தனது இல்லத்துக்கு வந்தார். அதற்குப் பிறகு எட்டே கால் மணி அளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அமித் ஷா இல்லத்தை அடைந்தனர்.

அமித்ஷா அப்போது சில அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி கொண்டிருந்ததால் சுமார் முக்கால் மணி நேரம் எடப்பாடி உள்ளிட்டோர் அவரது அழைப்புக்காக காத்திருந்தனர்.

இரவு 9 மணி வாக்கில் அமித்ஷா எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, கே பி முனுசாமி, வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது தொடக்கத்தில் எடப்பாடி பழனிசாமி சற்று இறுக்கமான முகத்துடன் தான் காணப்பட்டார். 2023ல் பாஜக கூட்டணியை முறித்ததில் இருந்து, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அமித் ஷாவின் கூட்டணி அழைப்பை நிராகரித்தது வரையிலான அவரது செயல்பாடுகள் தான் இந்த இறுக்கத்துக்கு காரணம்.

ஆனால் அமித்ஷா, இந்த இறுக்கத்தை தணிக்கும் மகிழ்ச்சியோடு உரையாடலை தொடங்கினார்.

‘2021 இல் நாம் கூட்டணியில் இருந்தோம், 2024இல் நாம் கூட்டணியில் இல்லை. அது உங்களுடைய முடிவு. இருந்தாலும் நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் இப்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்திருக்காது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் கணிசமான எம்பிக்களை வெற்றி பெற்று இருக்க முடியும். சரி அதெல்லாம் போகட்டும்.

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். திமுக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு நம்முடைய நடவடிக்கைகள் காரணமாக இருந்து விடக்கூடாது. அதனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் சீனியர் பார்ட்னரான நீங்கள் பழையபடி இணைய வேண்டும் என்று கூறியிருக்கிறார் அமித்ஷா.

எடப்பாடி பழனிசாமி அதற்கு சில விளக்கங்களை தமிழில் தெரிவிக்க தம்பிதுரை அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுகிற கட்சிகள் என அமித்ஷா தன் கையில் ஒரு பட்டியலே போட்டு வைத்துள்ளார்.

அதில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, ஐ ஜே கே, ஜான் பாண்டியன், புதிய தமிழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி, உள்ளிட்ட கட்சிகளோடு லேட்டஸ்டாக நாம் தமிழர் கட்சியையும் சேர்த்து இருக்கிறார் அமித்ஷா.

இந்த பட்டியலை எடப்பாடியிடம் காட்டி… ’நாம் ஒற்றுமையாக இருந்து 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை அப்புறப்படுத்துவோம். இதற்கு உங்கள் ஒத்துழைப்புத் தேவை’ என்று கூறி இருக்கிறார்.

அப்போது வேலுமணியை பார்த்த எடப்பாடி, ’தம்பி அந்த பேப்பரை எடுங்க’ என்றதும், தன் கையில் இருந்த ஒரு கவரை எடுத்து எடப்பாடியிடம் கொடுத்துள்ளார் வேலுமணி. அந்த கவரை எடப்பாடி அமித்ஷாவிடம் கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக எந்தெந்த அமைச்சர்கள் பொருளாதார ரீதியாக என்னென்னவெல்லாம் செய்து வைத்துள்ளனர் என்பதுதான் அந்தப் பட்டியலில் இடம்பெற்று இருந்தது.

அதைப் பார்த்த அமித் ஷா, ’ஓகே இதை நான் கவனித்துக் கொள்கிறேன்’ என்று உறுதி கூறியுள்ளார்.

இவ்வாறு சுமார் 50 நிமிடங்கள் நடந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் நிதி தேவை பற்றியும் டி லிமிடேஷன் விவகாரத்தில் திமுக அரசியல் ரீதியாக மக்களிடம் பெயர் வாங்க பார்க்கிறது. எனவே அதற்கு நாம் அனுமதிக்க கூடாது என்ற விஷயங்களையும் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் விளக்கியுள்ளார்.

50 நிமிட சந்திப்பு முடிந்த பிறகு தனியாக பத்து நிமிடங்கள் அமித்ஷாவும் எடப்பாடியும் உரையாடி இருக்கிறார்கள்.

அதன்பிறகு அங்கிருந்து வேறொரு காரில் புறப்பட்டு தான் தங்குமிடத்தை அடைந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

டெல்லி சந்திப்பில் நடைபெற்றது இதுதான்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது whatsapp.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share