வைஃபை ஆன் செய்ததும் திமுகவின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் புகைப்படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. கூட்டத்தின் தீர்மான நகல்களும் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சிலரிடம் போனில் பேசிய பின் வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுகவின் இன்றைய தலைமைச் செயற்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 750 பேர் கலந்துகொண்டார்கள். காலை 10 மணிக்கு தொடங்கிய செயற்குழு பகல் 1.30 வரை நீடித்தது.
பலரும் செயற்குழுக் கூட்டம் தீர்மானங்களை நிறைவேற்றியதோடு முடிந்துவிடும் என்று நினைத்து, இன்று காலையிலேயே சென்னையில் வேறு சில நிகழ்ச்சிகளுக்கு நேரம் கொடுத்திருந்தனர்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் தொடக்கத்திலேயே, ‘எல்லாரும் கூட்டம் முடியும் வரை இருக்கணும். உங்களோடு இருந்து உங்கள் கருத்துகளை எல்லாம் கேட்டுவிட்டு நானும் உங்களோடு சாப்பிட்டுவிட்டுதான் போகப் போறேன்’ என்று சொல்லிவிட்டார்.

தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றி முடித்த பிறகு, ‘லைவ்’ ஒளிபரப்பை நிறுத்திய பிறகு தலைமை செயற்குழு உறுப்பினர்களிடம், ‘2026 தேர்தலுக்கு நாம் எப்படி செயல்படணும்னு நினைக்கிறீங்க?’ என்ற கேள்வியோடு உறுப்பினர்களை பேச அழைத்தார். மொத்தம் 36 செயற்குழு உறுப்பினர்கள் பேசினர்.
அவர்களில் சிலரின் பேச்சுகள் அதிரடியாகவும், கட்சியின் தொண்டர்கள் மனநிலையை பிரதிபலிப்பதாகவும் இருந்தன.
தலைமை செயற்குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் பேசுகையில், ‘நம் கட்சி வேகமாக வளர்ச்சியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இளைஞர்களுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் நாம் கொடுக்க வேண்டும். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய அளவுக்கு நம்மிடம் வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், நாம் கூட்டணி தர்மப்படி கூட்டணிக் கட்சிகளுக்கும் தொகுதிகளை விட்டுக் கொடுத்து பணியாற்றுகிறோம். ஆனால், கூட்டணிக் கட்சிகளோ நம்மிடம் எத்தனை சீட்டுகள் என்று பேசிவிட்டுதான் என்னென்ன தொகுதிகளில் போட்டியிட முடியும் என்று சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள். நம்மிடம் தொகுதியை வாங்கிய பிறகுதான் அங்கு வேட்பாளர்களையே தேட ஆரம்பிக்கிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட இப்படித்தான். மயிலாடுதுறை தொகுதியை காங்கிரஸுக்கு கொடுத்தீர்கள். நாங்கள் பிரச்சாரத்துக்கு போகிறோம். கை சின்னத்துக்கு ஓட்டு கேட்கிறோம். மக்கள், ‘யார்ணே வேட்பாளர்?’ என்று கேட்கிறார்கள்.

நாங்களும், ‘இதோ சொல்லிடுவாங்க…’ என்று சமாளித்து தேர்தல் பணியாற்றினோம். கடைசி நேரத்தில் லோக்கலில் ஆளே இல்லாமல் கும்மிடிப்பூண்டியில் இருந்து ஒரு வேட்பாளரை போட்டார்கள். அவரையும் நாம் ஜெயிக்க வைத்தோம்.
இதேபோல 2021 சட்டமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சியை காங்கிரசுக்குக் கொடுத்தோம். நமக்கு டஃப் ஆக இருக்கும் என கருதிய உளுந்தூர் பேட்டையில் ஜெயித்துவிட்டோம். ஆனால், கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் வெளியூர் வேட்பாளரை போட்டு தோற்றுவிட்டது.
இதையெல்லாம் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை கறாராக நடத்த வேண்டும். சீட்டு கேட்டால், அந்தத் தொகுதியில் உங்களுக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா? 5 வேட்பாளர்கள் பட்டியலைக் கொடுங்கள் என்று கேட்க வேண்டும்.
வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்திய பிறகு தான் சீட்டே கொடுக்க வேண்டும். இதைத் தலைவர் கண்டிப்பாக செய்ய வேண்டும். இல்லையென்றால் கூட்டணிக் கட்சிகளின் சீட்டுகள் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுவிடும்’ என்று பேசினார்.
மேலும் வேல்முருகன் பெயர் சொல்லாமல் விமர்சித்த கல்யாணம், கூட்டணிக் கட்சிகளை தட்டி வைக்கவேண்டும் என்று பேசினார். இதை ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்திருக்கிறார்.
அடுத்து நீலகிரி முபாரக் பேசும்போது, ‘நாம் இளைஞர்களுக்கு வழி விடவேண்டும் என்று சொல்கிறோம். ஆனால், நீண்ட ஆண்டுகளாக ஒரே நபர்களே பொறுப்பில் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும்’ என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின், ‘திமுகவில் பதவி பெறுவதற்கு உழைப்புதான் தகுதி. வயது கிடையாது. உழைப்பைப் பொறுத்தே பதவி தேடி வரும்’ என்று பதிலளித்தார்.
இவர்களைத் தாண்டி இன்றைய தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திய குரல், திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜே.மூர்த்தியின் குரல்தான்.
அவர் பேசும்போது, ‘கட்சிக்காரங்களை நல்லா வச்சிக்கணும்னு சொல்றீங்க. ஆனா நம்ம ஆட்சியோட கான்ட்ராக்ட் எல்லாம் அதிமுககாரனுக்குதான் கிடைக்குது. அவன் தான் சம்பாதிக்கிறான். அதிமுக ஆட்சியில யாருக்கு கான்ட்ராக்ட் கொடுத்தாங்களோ, அவங்களுக்கேதான் இப்பவும் கொடுக்கிறீங்க.

அதுவும் எங்க மாவட்டத்துல நடக்குற வேலைகள் எங்க மாவட்ட அதிமுககாரங்களுக்கே கொடுக்கப்படுது. அதைப் பாத்துட்டு நம்ம கட்சிக்காரனுக்கு நாங்க என்ன பதில் சொல்றது? பண்றதுதான் பண்றீங்க… வெளி மாவட்ட அதிமுக காரங்களுக்காவது கான்ட்ராக்ட் கொடுங்க. கொஞ்சம் நிம்மதியா இருக்கும்’ என்று பேச அரங்கமே அதிர்ந்துவிட்டது.
உடனே இதை கவனித்த ஸ்டாலின், ‘கான்ட்ராக்ட் அப்படிங்கறதெல்லாம் கட்சி பாத்து கொடுக்குறது கிடையாது. அந்த கம்பெனியோட திறமை, தகுதி பார்த்துதான் கொடுக்கப்படுது. இதுல இந்த கட்சி அந்த கட்சினு எதுவும் கிடையாது’ என பதிலளித்தார். ஸ்டாலின் அளித்த இந்த பதில் செயற்குழு உறுப்பினர்களை மேலும் அதிர வைத்தது.
மதுரை ஜெயராமன் பேசுகையில், ‘ நம்ம ஆட்சியில நம்ம கட்சிக்காரனுக்கு எதுவும் செய்யமுடியலை. கோயிலுக்கு ஓ.ஏ. கூட போடமுடியலை….’ என்று தன் வருத்தத்தைப் பகிர்ந்தார்.
திருச்சி சிவா பேசுகையில், ‘இந்தியாவிலேயே பாஜகவை எதிர்த்து வலிமையாக குரல் கொடுத்து, கருத்திலும் களத்திலும் செயல்படும் ஒரே கட்சி திமுகதான். இதை நான் சொல்லவில்லை., நாடாளுமன்றத்தில் என்னை சந்திக்கும் மற்ற மாநில எம்.பி.க்களே மனம் விட்டு சொல்கிறார்கள். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எல்லாருக்கும் முன்னுதாரணமாக செயல்படுவதே நாம்தான்’ என்று பேசினார்.
செயற்குழு உறுப்பினர்கள் பேசி முடித்த பிறகு பேசிய ஸ்டாலின், ’இதோ இந்த அறிவாலயம் வாசலை எட்டிப் பார்க்காத தொண்டர்கள் இன்னும் ஏராளமாக ஊர்கள்ல இருக்காங்க. அவங்களாலதான் இந்த கட்சி இவ்வளவு சிறப்பா இருக்கிறது.
மந்திரிங்க மா.செக்கள் கட்சிக்காரங்களை மதிக்கறது கிடையாது. யார் பேரையும் சொல்ல விரும்பல. யார் என்ன பண்றீங்கனு தெரியும். இனியாவது கட்சிக்காரங்களை தேடி போங்க, உதவி செய்யுங்க.
எம்.ஜி.ஆர். இருக்கும்வரை நாம் ஆட்சியில இல்ல. கடந்த 10 ஆண்டும் நாம் ஆட்சியில இல்ல, ஆனா நம்ம கட்சி இன்னும் இருக்குன்னா அதுக்கு காரணம் தொண்டன்.
உங்களை அறிவாலயத்துக்கு யாராவது அழைச்சிட்டு வந்திருப்பாங்க. அவங்களாலதான் இன்னிக்கு இந்த இடத்துல நீங்க உக்காந்து இருக்கீங்க. அதுபோல நீங்களும் மத்தவங்களை வளர்த்துவிடுங்க.
நாம் சரியாக இருந்தா 200 தொகுதிக்கு மேலேயே வரும். சட்டமன்றத் தேர்தலில் வெல்வோம்’ என பேசி முடித்தார்.
அதன் பின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களுக்கு அறிவாலயத்தில் சைவ விருந்து அளிக்கப்பட்டது. ஸ்டாலினும் அமர்ந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…