வைஃபை ஆன் செய்ததும் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர் சந்திப்பு வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக்கப்படுவாரா?’ என ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டி.ஆர்.பி. ராஜா, ’ஏற்கனவே இதற்கு அமைச்சரே பதில் சொல்லிவிட்டார். என்றாலும் அவருக்கு உயர்ந்த பொறுப்பு கொடுக்கப்படுமானால் எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி’ என்று பதில் அளித்தார்.
2021 மே மாதம் திமுக ஆட்சி அமைந்ததும் உதயநிதி அமைச்சராக்கப்படுவாரா என்ற கேள்வி, அரசியல் வட்டாரத்திலும் திமுகவினர் மத்தியிலும் பெரிய அளவில் இருந்தது. ஆனால், 2022 டிசம்பரில் தான் உதயநிதி அமைச்சராக்கப்பட்டார்.
அதன்பிறகு சில மாதங்கள் கழித்து உதயநிதி துணை முதலமைச்சர் ஆக்கப்படுவாரா என்ற கேள்வி திமுக வட்டாரத்திலும் அதைத் தாண்டியும் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கிறது. விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கிற நிலையில், அதற்கு முன்பு அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்றும், அதில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்றெல்லாம் ஆருடங்கள் அள்ளி இறைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் தான் சில நாட்களுக்கு முன்பு திமுக இளைஞரணியின் 45 வது ஆண்டு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அதையெல்லாம் வதந்தி என்று குறிப்பிட்டார். மேலும், அமைச்சர்கள் எல்லாருமே முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருக்கிறோம் என்ற வழக்கமான பதிலையும் சொன்னார்.
இந்த அரசியல் சூழலில்தான், இன்று டி.ஆர்.பி. ராஜாவும் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டால் மிகப்பெரிய மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
இப்படி உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி என்ற விவாதம் திமுக மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் வட்டாரத்திலும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ’திமுகவில் உதயநிதியை தவிர வேறு யாரும் மூத்த முன்னோடிகள் இல்லையா?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், ’ஏன் உதயநிதியை விட சீனியரான கனிமொழிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுங்களேன்?’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ‘தம்பிக்கு துணை முதலமைச்சர் பதவி உண்டா இல்லையா?’ என முதல்வர் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான சிலர் அவரிடமே நேரடியாகவே கேட்டிருக்கிறார்கள்.
அவர்களிடம் ஸ்டாலின் சொன்ன பதில் என்னவென்றால், ‘திரும்பவும் நாம்தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். 2026-லும் நாமே ஆட்சி அமைக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிற மாதிரி எனக்கு பல ரிப்போர்ட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் அதற்கு ஏதும் நெருடலாக அமைந்துவிடக் கூடாது. இப்போது துணை முதல்வர் என ஒரு பதவியை உருவாக்கினால், முதல்வருக்கு உடம்பு முடியலையா என்ற பேச்சை எதிர்க்கட்சிகள் ஊதிப் பெரிதாக்குவார்கள்.
மேலும், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி வரும். அந்த குழப்பமெல்லாம் எதற்கு? இப்பவே உதயநிதி துணை முதல்வர் போலத்தானே இருக்காரு…’ என்பதுதான் ஸ்டாலின் சமீபத்தில் தன்னிடம் நேருக்கு நேராக கேட்டவர்களிடம் சொன்ன பதில்’ என்கிறார்கள் முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆசியாவிலேயே முதன்முறை… வியக்க வைக்கும் சென்னை
லயோலா நூற்றாண்டு விழா: கல்விக்கான தடைகள் புதிய வடிவில் வருகிறது… முதல்வர் ஸ்டாலின்