வைஃபை ஆன் பண்ணியதும் உதயநிதி துணை முதலமைச்சராக பதவி ஏற்பது எப்போது என்ற கேள்விகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்தபடி வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது,
“திமுக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கு போன் போட்டாலும் சரி, அவர்களுக்கு போன் வந்தாலும் சரி… கேட்கும்- கேட்கப்படும் ஒரே கேள்வி… ‘அண்ணே அறிவிப்பு எப்போ வரும்?’ என்பதுதான்.
செப்டம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என்று முதலில் தகவல்கள் வந்தன. அதனால், அமைச்சர்கள் பலர் சென்னையிலேயே முகாமிட்டிருக்கிறார்கள். சீனியர் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் சென்னையில்தான் இருக்கிறார்கள்.
செப்டம்பர் 19ஆம் தேதி வரை சென்னையில் இருந்த பல அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், இளைஞர் அணி மாநில நிர்வாகிகளும் அறிவிப்பு வந்தவுடன் புறப்பட்டு சென்னை வரலாம் என்ற திட்டத்தோடு அவரவர் ஊருக்கு புறப்பட்டனர்.
அமைச்சர் வேலு திருவண்ணாமலையில் கட்சி தொடர்பான சந்திப்புகள் இருப்பதால் 18ஆம் தேதி பிற்பகலே ஊர் சென்றார். மறைந்த முன்னாள் அமைச்சர் சுந்தரத்துக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் நேரு, சேலம் சென்று பின் திருச்சியை அடைந்தார். எந்நேரமும் துணை முதல்வர் அறிவிப்பு வரலாம், சில மணி நேர விமானப் பயணம்தானே… சென்னை சென்றுவிடலாம் என்று சில அமைச்சர்கள் தங்கள் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.
துரைமுருகனே முதல்வரிடம், ‘எதுக்குங்க இன்னமும் தாமதம்… எல்லாருமே ஏத்துக்கிட்டாங்க. அமைச்சரவை மாற்றமும் வரும் என்று பேச்சாக இருக்கிறது. அப்படி ஒரு திட்டம் இருந்தால் அதையும் சேர்த்து தாமதிக்காமல் செய்துவிடலாமே’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு முதல்வர், ‘செந்தில்பாலாஜி வரணுமே…’ என்று கூறியுள்ளார்.
தங்கம் தென்னரசு தனக்கு மின்சாரம், நிதி ஆகிய இரு துறைகள் சுமையாக இருப்பதாக முதல்வரே சொல்லியிருக்கிறார். மின்சாரத் துறையை எடுத்து உதயநிதியிடம் அளிக்கலாம் என்று ஒரு விவாதம் ஓடியிருக்கிறது.
ஆனால் மின்சாரத்துறை என்பது காம்பளக்ஸான துறை, அதில் முழு நேரமும் செலவிட வேண்டும். அப்படி ஒரு துறையை துணை முதல்வராகும் உதயநிதியிடம் அளித்தால் சரியாக இருக்குமா என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் உதயநிதிக்கு துணை முதல்வர் அளிப்பது என்பது முடிவாகிவிட்டது. அறிவிக்கவேண்டியதுதான் பாக்கி.
இதற்கிடையே தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் அறை உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் தளத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்கு செல்லும் வழியில் தரைத்தளத்தில் துணை முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் உதயநிதிக்கான பிரத்யேக விசாலமான அறை தயாராகி வருகிறது. மூன்று முதல் நான்கு கேபின்களை இணைத்து பரந்து விரிந்த அறையாக அந்த அறை தயார் செய்யப்படுகிறது. கிட்டதட்ட 75 சதவீத பணிகள் முடிந்துவிட்டன என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
இதுமட்டுமல்ல உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்ட பிறகு அவரது செயலாளராக வரப் போவது யார் என்ற போட்டி ஐஏஎஸ் அதிகாரிகள் இடையே தீவிரமாகியிருக்கிறது. அடுத்த இரண்டரை வருடங்களில் மிகவும் சக்தி வாய்ந்த பதவிகளில் ஒன்றாக இருக்கப் போவது துணை முதல்வரின் செயலாளர் பதவி.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக இருக்கிற சாய்குமார் ஐ.ஏ.எஸ்., உயர் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ், அமைச்சர் உதயநிதியின் தற்போதைய துறையான விளையாட்டுத் துறை செயலாளராக இருக்கும் அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளின் பெயர்கள் துணை முதல்வரின் செயலாளர் பதவி ரேஸில் இருக்கின்றன. மேலும் சில அதிகாரிகளும் இந்த பதவிக்காக லாபி செய்து வருகின்றனர்.
இவ்வாறு நிர்வாக ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் உதயநிதி துணை முதல்வர் ஆவதற்கான ஏற்பாடுகள் ரெடியாகிவிட்டன. வீட்டில் மாப்பிள்ளை சபரீசன், மகள் செந்தாமரை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்து பேசி நல்ல நாள் குறித்து அறிவிப்பு வெளியிடுவார்கள் என்பதுதான் திமுக வட்டாரத்தின் லேட்டஸ்ட் அப்டேட்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பா? ராகுலுக்கு பறந்த கடிதம்!
சூட்கேஸில் பெண்ணின் உடல்… பின்னணி என்ன?: கொலையாளி வாக்குமூலம்!