வைஃபை ஆன் செய்ததும் டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிய பிரஸ்மீட் வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதை பார்த்தபடியே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், இரட்டை இலை சின்னம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் மீண்டும் அலையடிக்க ஆரம்பித்துள்ளன.
கடந்த டிசம்பர் 12ஆம் தேதி டெல்லி சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மறுநாள் 13 ஆம் தேதி சென்னை திரும்பிவிட்டார்.

டெல்லியில் அவர் சில பாஜக முக்கிய பிரமுகர்களை சந்திக்க முயன்றார். நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்த நிலையில், அவரால் சந்திக்க முடியவில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஃபோனில் தினகரன் பேசியதாக டெல்லி வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
இதன்பிறகு டிசம்பர் 17ஆம் தேதி மதுரையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன் அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘ ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால்தான் அதிமுகவுக்கு எதிர்காலம் உண்டு’ என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே அதிமுக கூட்டணி பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலையும், ‘தமிழகத்தில் திமுக ஒழிக்கப்பட வேண்டும். அப்படியானால் எல்லாம் ஒன்றாக சேர்ந்தால் தான் ஒழிக்க முடியுமா இல்லை வலிமையான கூட்டணியால்தான் ஒழிக்க முடியுமா?” என்று தனது பாணிக்கு மாறுபட்ட வகையில் பதில் கொடுத்திருந்தார்.

இந்த சூழலில், டிடிவி தினகரனுக்கு இன்று பதிலளித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘அவர் தன் மேலுள்ள வழக்குகளுக்காக பாஜகவிடம் சரண்டர் ஆகி இருக்கிறார். அதிமுக அது போல் ஆகாது’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் தான் இரட்டை இலை சின்னம் பற்றிய தனது விசாரணையை வருகிற 23ஆம் தேதி வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் உரிமைகள் வழக்குகள் முடியும் வரை யாருக்கும் ஒதுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த வழக்கில் தேர்தல் ஆணையம் வரும் 23ஆம் தேதி இதுகுறித்து அனைத்து தரப்பினரின் பிரதிநிதிகளையும் தேர்தல் ஆணையத்தில் ஆஜராக ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என பதில் அளித்தது.
இதே போல பெங்களூர் புகழேந்தி தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னம் பற்றி அளித்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தேர்தல் ஆணையம் அமைந்த பகுதிக்கு உட்பட்ட டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார்.
அங்கேயும் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் பற்றி பதில் அளிப்பதற்கு மனுதாரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக சட்டமன்ற அலுவலகம் தேர்தல் ஆணையத்துக்கு டிசம்பர் 17ஆம் தேதி தெரிவித்திருக்கிறது.
இதே போல 2023 பிப்ரவரியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்த போது, இரட்டை இலை யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு அவசரமான மனு தாக்கல் செய்யப்பட்டது.
‘பொதுக்குழுவில் எங்கள் கட்சி மேற்கொண்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க மறுக்கிறது. வருகிற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள் எங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அந்த வழக்கில் கோரி இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிமுகவின் இரு தரப்பும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவதால்… கட்சியின் அவை தலைவர் மூலம் பொதுக்குழுவை கூட்டி பொதுவான வேட்பாளரை முடிவு செய்து அதை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். இதன்படி தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அப்போது எடப்பாடி தரப்பில் தான் பொதுக்குழு உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 99 சதவீதம் பேர் இருந்ததால், அவர்கள் பொதுக்குழுவை கூட்ட கால அவகாசம் இல்லாத நிலையில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. அதைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இதன் பிறகு ஓபிஎஸ்சும் தனது தரப்பு வேட்பாளரை ஈரோடு கிழக்கில் இருந்து வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இந்த பின்னணியில் 2025 இல் நடக்க இருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மையமாக வைத்து இரட்டை இலை சின்னம் தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ளன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு மிக குறுகிய காலத்துக்கு முன்னதாக வருவதால்… இந்த இடைத்தேர்தலிலேயே திமுகவுக்கு எதிரான ஒரு பொதுவான வேட்பாளரை வலிமையான கூட்டணி மூலமாக நிறுத்த வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.
அதனால்தான் அண்ணாமலை அதிமுக பற்றிய தனது வழக்கமான பாணி விமர்சனங்களை ஒதுக்கி வைத்து வருகிறார். டிடிவி தினகரனும் டெல்லியிடம் இதைத்தான் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அடிப்படையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு முன்பாக அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகளை மையமாக வைத்து தேர்தல் ஆணையத்தின் மூலமாக அதிமுகவுக்குள் ஒரு தீர்வை திணிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறது டெல்லி மேலிடம்.
நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழுவில் கூட திமுக அரசுக்கு கண்டனம், பாஜக அரசுக்கு வலியுறுத்தல் என்று தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டதை திமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
எதிர்பாராமல் வந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் அதிமுகவிலும் சில எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டு வரும் என்கிறார்கள் அதிமுகவின் சில நிர்வாகிகளே.
ஆனால் எடப்பாடிக்கு நெருக்கமானவர்களோ, ‘2023 ஐ விட இப்போது நாங்கள் தெளிவாகவும் தைரியமாகவும் இருக்கிறோம். எனவே இரட்டை இலையை அதிமுகவிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாது’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக – பாஜக கூட்டணி? டிடிவி தினகரனுக்கு ஜெயக்குமார் பதில்!
நுண்கலை மாணவர்களுக்கு சென்னை ஐஐடி-யில் சிறப்பு ஒதுக்கீடு: யாரெல்லாம் தகுதியானவர்கள்?