வைஃபை ஆன் செய்தவுடன் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலையான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை சென்னை புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவர் வெளியே வந்ததும் எங்கே தங்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்தது. சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்திருக்க கூடிய அமைச்சர்கள் குடியிருப்பில் தனது வீட்டில் இருந்தபோதுதான் செந்தில் பாலாஜி 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இப்போது அவர் அமைச்சராக இல்லாததால் சட்டரீதியாக அங்கே செல்ல முடியாது. அங்கே செல்வதற்கும் செந்தில் பாலாஜி விரும்பவில்லை.
உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு காலை 10.30 மணியளவில் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்த தகவல், புழல் சிறையில் உள்ள அவருக்கு சில நிமிடங்களில் தெரியப்படுத்தப்பட்டது. அப்போதே செந்தில்பாலாஜி, ‘மாரிஸ் ஹோட்டலயே தங்கிக்கலாம்’ என்றுதான் தனது வழக்கறிஞர்கள் மூலம் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியனுப்பியுள்ளார்.
சென்னையில் எத்தனையோ ஹோட்டல்கள் இருந்தாலும் ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒவ்வொரு ஹோட்டலை ராசியானதாக கருதுவார்கள். அது அவரவரின் சென்டிமென்ட் நம்பிக்கையை பொறுத்தது. அதேபோலத்தான் செந்தில் பாலாஜிக்கு மாரிஸ் ஹோட்டல் மிகவும் ராசியானது. செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது, ஒரு முறை அவர் இந்த ஹோட்டலில் தங்கி இருந்த போதுதான் அவருக்கு சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிப்பு வெளிவந்தது. இந்த ஓட்டலில் அவர் தங்கி இருந்த போதுதான் அவர் அமைச்சரவையில் இடம் பெறும் அறிவிப்பும் வெளிவந்தது. இதனால்தான், எத்தனையோ நண்பர்கள் ‘இன்று இரவு எங்கள் வீட்டுக்கு வந்து தங்குங்கள்’ என்று நேற்றே அவரை அழைத்தபோதும் மாரிஸ் ஹோட்டலில் ரூம் போட்டார்.
புழல் சிறையில் இருந்து புறப்பட்டு கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செந்தில் பாலாஜி ஓட்டலுக்கு சென்றார். நேற்று மாலை முதலே ஹோட்டலில் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்காக திமுக அமைச்சர்கள் நிர்வாகிகள் ஆகியோர் படையெடுத்தனர்.
அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பல அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் சந்தித்தனர்.
ஏழாவது தளத்தில் தங்கியிருந்த செந்தில்பாலாஜியை பார்க்க, நேற்று இரவு 10 மணி வரையும் கூட்டம் வந்து கொண்டே இருந்ததால் பத்து மணிக்கு பிறகு யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று செந்தில் பாலாஜி முடிவு செய்தார். ஆனபோதும் அதுவரை வந்திருந்தவர்களை பார்க்காமல் அனுப்ப வேண்டாம் என்பதற்காக 10.30 மணி வரை அவர்களை சந்தித்து பேசினார்.
நேற்று இரவே முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் செந்தில்பாலாஜியிடம் போனில் உரையாடியிருக்கிறார்கள். ‘நல்ல டாக்டரா பாத்து முதல்ல உடம்ப செக்கப் பண்ணிக்கங்க. நான் டெல்லியில இருந்து வந்ததும் விரிவா பேசலாம்’ என்று செந்தில்பாலாஜியிடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததாக செந்தில்பாலாஜி வட்டாரங்கள் கூறுகிறார்கள்.
சந்திக்க வருபவர்களின் நலன் நேரம் கருதி இன்று (செப்டம்பர் 27) முதல் தளத்தில் உள்ள அறையில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
இதய அறுவை சிகிச்சை மற்றும் தொடர் சிறைவாசம் ஆகியவற்றால் உடலளவில் மிகவும் தளர்ந்துபோய்தான் இருந்தார். செந்தில் பாலாஜியை சந்தித்த அமைச்சர்களும் நிர்வாகிகளும் அவருடன் நிறைய பேசியும் பதிலுக்கு செந்தில் பாலாஜி ரொம்பவும் அளவாகத்தான் பேசினார்.
’தலைவர் விட்ட அறிக்கையை பார்த்தீங்கள்ல… உங்க மேல எவ்வளவு மதிப்பு வச்சிருக்காரு பாருங்க…’ என்று சிலர் செந்தில் பாலாஜியிடம் சொல்ல, ‘ஆமாம் என்று கையெடுத்து கும்பிட்டுள்ளார். பலரும் ’உடல் நலனை பார்த்துக்கோங்க’ என்று செந்தில் பாலாஜி இடம் தெரிவித்தனர். சிலர் ’முன்பை விட உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பதவி தான் தலைவர் கொடுப்பாரு’ என்று செந்தில் பாலாஜியிடம் சொல்ல அதற்கு, ’எல்லாம் தலைவர் முடிவு தான்’ என்று பதில் சொல்லி இருக்கிறார் செந்தில் பாலாஜி.
கொங்கு மண்டலத்தில் இருக்கும் திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் செந்தில்பாலாஜியை சந்தித்தனர். கொங்கு மண்டலத்தினரைப் பார்த்ததும் செந்தில்பாலாஜிக்கு கொஞ்சம் பூஸ்ட் அதிகரித்தது. செந்தில்பாலாஜியால் திமுக கூட்டணிக்கு வந்த புதிய திராவிடர் கழக தலைவரான ராஜ் கவுண்டரை பார்த்ததும் கட்டித் தழுவிக் கொண்டவர், ‘ஒரு வாரம் போகட்டுமுங்க… விரிவா பேசலாம்’ என்று பதில் சொல்லியிருக்கிறார்.
இன்று காலை கொஞ்ச நேரம் ஹோட்டல் ரூமில் செந்தில்பாலாஜி இல்லை. சுமார் அரைமணி நேர இடைவேளையில் முக்கியமானவர்களை அவரே தேடிச் சென்று பார்த்ததாக சொல்கிறார்கள். அதன் பின் ஹோட்டலுக்கு வந்தார். அதன் பின்னரே அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு கையெழுத்திடச் சென்றார்.
இன்று பகல் முழுதும் செந்தில்பாலாஜியை பலரும் சந்தித்த நிலையில், , இன்று மாலை அமைச்சர் உதயநிதியின் அலுவலகத்துக்குச் சென்று அவரை சந்தித்தார் செந்தில்பாலாஜி. கட்டித் தழுவி வரவேற்றார் உதயநிதி. சிறிது நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். முதல்வர் டெல்லியில் இருந்து திரும்பியதும் அவரையும் சந்திக்கிறார் செந்தில்பாலாஜி.
இந்நிலையில் செந்தில்பாலாஜி அமைச்சராவது உறுதி எனினும், அவருக்கு என்ன துறை வழங்குவது என்ற ஆலோசனைகள் இன்னமும் நடந்து வருவதாக சொல்கிறார்கள் திமுக தரப்பில். முன்னிலும் உரம்பெற்று வந்திருக்கிறார் என்ற முதல்வரின் வார்த்தைகளின்படி முன்னைவிட வலிமையான துறைகள் செந்தில்பாலாஜிக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் அமைச்சர்களிடத்தில் இதுபற்றிய விவாதங்களும் அதிகரித்துள்ளது.
செந்தில்பாலாஜியின் மாரிஸ் ஹோட்டல் சென்டிமென்ட்படி அவருக்கு அடுத்த கட்ட அரசியல் உயர்வுக்கான அறிவிப்பும் சில நாட்களில் வரும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கங்கணாவின் எமர்ஜென்சி… நீடிக்கும் சிக்கல் : சென்சார் போர்டு முடிவு என்ன?
Comments are closed.