டிஜிட்டல் திண்ணை: அதிர்ச்சி ‘ரிப்போர்ட்’- ஆட்டத்தை தொடங்கிய ஸ்டாலின்… அதிருதே கோட்டை!

Published On:

| By vanangamudi

Digital Thinnai CM Meeting

வைஃபை ஆன் செய்ததும் கோட்டையே ரொம்ப பரபரத்துக் கொண்டிருக்கிறதாமே.. என அமைச்சர்கள், அதிகாரிகளைப் போல பதற்றத்துடன் டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Stalin DMK Tamil Nadu

அப்படி என்ன கோட்டையில் பரபரப்பு? பதற்றம்?

ADVERTISEMENT

முதல்வர் ஸ்டாலின் இன்று ஜூலை 7-ந் தேதி கோட்டையில் சுமார் 4 மணி நேரம் 10 துறைகளின் செயல்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்திருக்கிறார். இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் துறைகளும் அடங்கும்.

முதல்வர் ஸ்டாலினின் இப்படி ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்வது பற்றி கோட்டை வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, ” 2024-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ‘உளவுத்துறை’ டீம் களமிறக்கப்பட்டது. இந்த டீம் ஒவ்வொரு தொகுதியிலும் கூலி தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள் என ஒவ்வொரு தரப்பையும் சந்தித்து பல்வேறு விவரங்களை பதிவு செய்தது. திமுக ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி? இப்போ தேர்தல் நடந்தால் யாருக்கு ஓட்டுப் போடுவீங்க? கடந்த தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட்டீங்க? என பல கேள்விகளைக் கேட்டு பதில்களை வாங்கியது இந்த டீம். இந்த பதில்கள் அனைத்தையும் தொகுத்து ஒரு சர்வே ரிப்போர்ட்டாக முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தது உளவுத்துறை.

ADVERTISEMENT

இந்த உளவுத்துறையின் ரிப்போர்ட்டை பார்த்ததும் முதல்வர் ஸ்டாலின் ரொம்பவே அப்செட் ஆனாராம். இந்த ரிப்போர்ட்டில் 60%, திமுக ஆட்சி மீது அதிருப்தி இருப்பதாக சொல்லப்பட்டிருந்தது. அத்துடன் திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ1,000 வழங்கும் திட்டத்தைத் தவிர வேறு எந்த ஒரு திட்டமும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டியது இந்த ரிப்போர்ட். கடந்த அதிமுக ஆட்சியின் லேப்டாப், சைக்கிள் திட்டங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட குறைவாகத்தான் இருக்கிறது திமுக அரசின் மாணவர் கல்வி உதவித் தொகை திட்டம் என்றும் அந்த ரிப்போர்ட் பட்டவர்த்தனமாக போட்டுடைத்துவிட்டது.

அத்துடன் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி உள்ளிட்டவை தொடர்பாகவும் பொதுமக்களிடம் பரவலான அதிருப்தி இருக்கிறது என்கிற தகவலையும் உளவுத்துறையின் ரிப்போர்ட் கோட்டிட்டுக் காட்டி இருந்தது. இந்த ரிப்போர்ட்டை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட பின்னர் அதிரடியாக களமிறங்கிவிட்டார் முதல்வர் ஸ்டாலின்” என்றனர்.

ADVERTISEMENT

இந்த ரிப்போர்ட்டை வைத்துதான் ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்ய முடிவு செய்தாராம். முதலில் அமைச்சர் சக்கரபாணியின் உணவுத்துறையை கடந்த மாதம் ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின். பின்னர் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை கூட்டுறவுத் துறை என அடுத்தடுத்த துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி, தம்மிடம் இருந்த ரிப்போர்ட் அடிப்படையில் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்றார் ஸ்டாலின்.

இதன் தொடர்ச்சியாகத்தான் இன்று ஜூலை 7-ந் தேதி தலைமை செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை, இயற்கை வளங்கள் துறை, போக்குவரத்துத் துறை, உயர்கல்வித் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை என மொத்தம் 10 துறைகளின் ஆய்வுக் கூட்டங்களை சுமார் 4 மணிநேரம் நடத்தி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

தற்போது திமுகவினர், “ஓரணியில் தமிழ்நாடு” என ஒவ்வொரு வீடாகப் போய் அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் கேட்டு வருகின்றனர்.. இந்த ரிப்போர்ட்டும் இப்போது முதல்வர் ஸ்டாலினின் நேரடிப் பார்வைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட், தற்போது திமுகவினர் அனுப்பி வரும் கிரவுண்ட் ரிப்போர்ட் இவற்றை வைத்துக் கொண்டு இன்றைய ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் துறை தொடர்பாக மட்டும் சுமார் 30 நிமிடங்கள் ஆய்வு மேற்கொண்டார் ஸ்டாலின். அப்போது, அரசு அறிவித்த அறிவிப்புகள் எத்தனை? வெளியிடபட்ட அரசாணைகள் எத்தனை? நடைமுறையில் செயல்படுத்தப்படுகிற அறிவிப்புகள் எத்தனை? சில திட்டங்கள் முழுமையாக சென்றடையாமல் இருப்பது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி அதிகாரிகளிடம் இருந்து பதிலைப் பெற்றார் ஸ்டாலின். சில கேள்விகளுக்கு, நிதி பற்றாக்குறை எனவும் அதிகாரிகள் தரப்பில் பதில் சொல்லப்பட்டது.

அரசு அறிவிக்கும் திட்டங்கள் மக்களை சென்றடையாமல் இருக்கின்றன.. அப்படியானால் அந்த திட்டங்கள் மக்களை சென்றடைய, தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்தீங்க? என்றும் கேள்விகளை அடுக்கினார் முதல்வர் ஸ்டாலின்.

அத்துடன், மாவட்டங்களில் ஆட்சியர் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் வாங்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லையா? அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் சிஎம் செல்லுக்கு ஏன் இவ்வளவு பேர் மனு அனுப்புவார்கள்? பொதுமக்களிடம் மனு வாங்கி என்னதான் செய்தார்கள்? என காட்டமாகவும் கடுப்படித்துவிட்டாராம் முதல்வர் ஸ்டாலின்.

இந்த ஜரூரில்தான் வரும் ஜூலை 11-ந் தேதி உள்ளாட்சித் துறை உள்ளிட்ட துறைகளின் ஆய்வுக் கூட்டங்களை நடத்த இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஒரு பக்கம் ஆய்வுக் கூட்டங்கள்.. இன்னொரு பக்கம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கும் ரிப்போர்ட்.. இவற்றை வைத்து ‘எங்கெல்லாம் ரிப்பேர்’ இருக்கிறதோ அங்கெல்லாம் சரிபார்த்துவிட வேண்டும் என்கிற முனைப்புடன் தீவிரமாக இருக்கிறார் முதல்வர்.. இதனால்தான் கோட்டையில் ஒரே பரபரப்பும் பதற்றமும் என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share