வைஃபை ஆன் செய்ததும் எடப்பாடியோடு மோதிக் கொண்டிருக்கும் செங்கோட்டையன் ஒரு விழாவில் பேசும் வீடியோ லிங்க் இன்பாக்ஸில் வந்து விழுந்தது. digital thinnai sengottaiyan plan to eliminate eps from admk
செங்கோட்டையன் பேச்சை முழுவதும் கேட்டுவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“நேற்று மார்ச் 14ஆம் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பித்த நிலையில், வெளிநடப்பு செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களோடு செங்கோட்டையன் சேர்ந்து வெளிநடப்பு செய்யவில்லை. அது மட்டுமல்ல சட்டமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாக கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூட்டிய எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல நேற்று சபாநாயகர் அப்பாவுவை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தார் செங்கோட்டையன்.
அதிமுகவுக்குள் இது பெரிய சலசலப்புகளை ஏற்படுத்திய நிலையில், நேற்றைய டிஜிட்டல் திண்ணையில், ‘பிக் ஆபரேஷனுக்கு தயாராகும் செங்கோட்டையன்… சட்டமன்றத்திலேயே எடப்பாடிக்கு ஷாக்’ என்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளிலும் செங்கோட்டையன் சபாநாயகரை அவரது அறையில் சென்று தனியாக சந்தித்தார்.

அதன்பின் இன்று சட்டமன்றம் கூடியதும் செங்கோட்டையனிடம் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.பி.அன்பழகன், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் வேளாண் பட்ஜெட் வாசிக்கப்பட்டு கொண்டிருக்கும் போதே மெல்லிய குரலில் பேசினார்கள். அதற்குப் பிறகும் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமலேயே புறப்பட்டு விட்டார்.
இந்த நிலையில் தான் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடியிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, ‘ அதை அவரிடமே போய் கேளுங்க’ என கோபமாக பதில் அளித்தார்.
இதற்குப் பிறகுதான் இன்று மாலை வலதுசாரி பத்திரிக்கையாளராக அறியப்படும் ரங்கராஜ் பாண்டே நடத்தும் சாணக்கியா youtube சேனலின் ஆறாவது ஆண்டு விழாவில் மேடை ஏறினார் செங்கோட்டையன்.
இந்த விழாவில் அவருடைய பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
’நான் ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன். அளந்து தான் பேச வேண்டும்’ என்று ஆரம்பித்த செங்கோட்டையன், தனக்கும் எம்.ஜி.ஆருக்குமான உறவு பற்றியும், எம்ஜிஆர் பற்றியும் விளக்கினார். எம்ஜிஆர் மறைந்த பிறகு அதிமுகவை ஜெயலலிதா எப்படி கட்டி காப்பாற்றினார் என்று விளக்கினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்காண்டு காலம் நல்லாட்சி நடத்தினோம் என்பதோடு அந்த விளக்கத்தை முடித்துக் கொண்டார் செங்கோட்டையன். அப்போது முதல்வராக இருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை கூட அவர் உச்சரிக்கவில்லை.

என்னுடைய தொகுதியில் சாயப் பட்டறை சம்பந்தமாக ஒத்திவைப்பு தீர்மானம் கொடுப்பதற்காக சபாநாயகரை சந்தித்தேன். ஒரு சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகரை சந்திப்பது இயல்பான விஷயம்தான் என்று ஒரு விளக்கம் கொடுத்தார் செங்கோட்டையன். இது மட்டுமல்ல பிரதமர் மோடியை மிகவும் புகழ்ந்து பேசினார்.
தனது பேச்சை முடிக்கும் போது, ‘எந்த பாதை சரியாக இருக்கிறதோ அந்த பாதையில் நான் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது; என் பாதை தெளிவானது; வெற்றி முடிவானது; சில வேடிக்கை மனிதரை போலே நான் விழுந்து விடமாட்டேன்’ என்று கூறி முடித்தார் செங்கோட்டையன்.
அதாவது அதிமுகவின் வரலாற்றையே தனது பேச்சில் சுருக்கமாக கூறிய செங்கோட்டையன் அதில் நான்காண்டு காலம் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி பெயரை கவனமாக தவிர்த்தார்.
இந்த விழாவில் பல பாஜக பிரமுகர்களும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் கலந்து கொண்ட நிலையில் செங்கோட்டையனின் இந்த பேச்சையடுத்து, ‘எடப்பாடி இல்லாத அதிமுக’ என்பதையே அவர் வெளிப்படையாக சுட்டிக் காட்டுகிறார் என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையில் செங்கோட்டையின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசனை தெரிவித்தனர். ஆனால் ஏற்கனவே அதிமுகவில் உட்கட்சி பிரச்சனைகள் இருக்கும் இந்த நிலையில் செங்கோட்டையின் மீது நடவடிக்கை எடுத்தால் தேர்தலுக்கு நெருக்கமான இந்த காலகட்டத்தில் அது வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் சிலர் எடப்பாடியிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் தனக்கு எதிரான அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஊக்கம் கொடுப்பதாக செங்கோட்டையன் கோபத்தில் இருந்துள்ளார். அதன் விளைவாகத்தான் அவிநாசி அத்திக்கடவு பாராட்டு விழாவுக்கு அவர் செல்லாமல் தவிர்த்தார். அதன் பிறகு எடப்பாடிக்கு எதிராக அவர் தொடர்ந்து சலசலப்பு கிளப்பி வந்த நிலையில்… செங்கோட்டையன் சீனியர் முகமாக இருந்தாலும் தற்போது அரசியலில் அவர் கோபிசெட்டிபாளையத்தை தாண்டி எந்த செல்வாக்கும் செலுத்த முடியாது என எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு ரிப்போர்ட் கொடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் செங்கோட்டையனிடம் சமாதானம் பேச வேண்டாம் என முடிவெடுத்துவிட்டார் எடப்பாடி. இந்த பின்னணியில்தான், அடுத்தடுத்து செங்கோட்டையன் இது போன்ற அதிரடிகளில் இறங்கி வருகிறார்.
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக என இரண்டு அம்சங்களை வலியுறுத்தி தான் செங்கோட்டையன் இந்த காய்களை நகர்த்தி வருகிறார். இன்று அவருடைய மேடைப்பேச்சு அதைத்தான் காட்டுகிறது.
செங்கோட்டையனின் பேச்சு நாகரிகம் இல்லாதது என உடனடியாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பதிலடி கொடுத்துள்ளார். எனவே செங்கோட்டையனை மையமாக வைத்து அதிமுகவில் அதிரடிகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.