வைஃபை ஆன் செய்ததும் பிரதமர் மோடி காசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“நான்கு கட்ட மக்களவைத் தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்னும் மூன்று கட்டங்கள் பாக்கி இருக்கின்றன. இப்போதே திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தன்னை சந்திக்க வருகிற அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களிடத்தில்… ‘நாடாளுமன்ற தேர்தலில் நமது வெற்றி உறுதி. அதே நேரம் அடுத்த தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும்’ என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
இப்போது தான் நாடாளுமன்ற தேர்தலும் முடிந்திருக்கிறது. அடுத்து என்ன தேர்தல் என்றால் ஊரக உள்ளாட்சித் தேர்தல்தான். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
அப்போது நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மறுசீரமைப்பு செய்ய வேண்டியிருந்ததால்… ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021 இல் தான் அந்த 9 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது
வருகிற ஜூன் 4-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அடுத்த ஓரிரு மாதங்களில் அநேகமாக ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்குமான ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஸ்டாலின் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகளிடம் ஆலோசித்து அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது.
இதே நேரம் இன்னும் சில நிர்வாகிகள் 2026 ஆம் ஆண்டு முடிவடைகிற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலோடு சேர்த்து மொத்தமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம். அதுவரை இந்த 27 மாவட்டங்களுக்கும் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் பின்பற்றியது போல தனி அலுவலர் நியமித்து நேரடியாக மாநில அரசே நிர்வகிப்பது போல செய்யலாம் என்று யோசனை சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் முதலமைச்சரோ 2024 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும், அதாவது பிற்பாடு நடக்க வேண்டிய ஒன்பது மாவட்டங்களுக்கும் சேர்த்து முன்கூட்டியே ஊரக உள்ளாட்சி தேர்தலை 2024 டிசம்பரில் நடத்திட வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாக சொல்கிறார்கள்.
எனவே நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்த கையோடு அடுத்ததாக ஊரக உள்ளாட்சித் தேர்தல், அதற்கு அடுத்து சட்டமன்றத் தேர்தல் என்று தொடர் பரபரப்புக்கு தயாராகிறது தமிழ்நாடு அரசியல் களம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழக்கறிஞர்களுக்கு பொருந்தாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
ரூ.1799-ல் நாய்ஸ் கேன்சலேஷன் இயர்பட்ஸ்… என்ன மாடலா இருக்கும்?