டிஜிட்டல் திண்ணை: ‘Operation KG’.. ராமதாஸ்- அன்புமணி இடையே கடும் போட்டி! ‘கொட்டி கொடுக்க’ ரெடியாக இருக்கும் சவுமியா!

Published On:

| By Minnambalam Desk

PMK Ramadoss Anbumani

வைஃபை ஆன் செய்ததும் காடுவெட்டி குருவின் மகனை வளைத்து விடுவதில் மல்லுக்கட்டும் அப்பா -மகன் என வாசித்தபடியே மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Ramadoss and Anbumani Battle

‘இதுக்கு எல்லாம் ஒரு end card இல்லையா’ என புலம்பும் அளவுக்கு பாமகவுக்குள் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான மோதல் தொடருகிறது. ஒரு பக்கம் அன்புமணிக்கு ஆதரவான நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும், அதற்கு எதிராக ‘இவர் யார் நீக்குவதற்கு? பொதுக்குழுதானே முடிவு எடுக்க வேண்டும்? அதனால இப்போதும் நீங்கள்தான் பொறுப்பில் இருக்கிறீர்கள்.. அவர் நீக்கிவிட்டால் நான் உங்களை தொடரச் செய்வேன்’ என்று அன்புமணியும் ஏட்டிக்குப் போட்டியாக வெளியிடுகிற அறிவிப்புகள், பாமகவினரை பெரும் குழப்பத்தில் தள்ளிவிட்டிருக்கிறது.

இன்னொரு பக்கம், இந்த குழப்பங்கள் எல்லாமே தற்காலிகமானதுதான்.. எல்லாமே கூடிய சீக்கிரமே சரியாகிவிடும் என்று அப்பாவும் மகனும் தங்களை சந்திக்கும் நிர்வாகிகளிடம் சமாதானம் செய்வதும் தொடருகிறது.

ஆனாலும், ‘ம்ஹூம்..கண்ணுக்கு எட்டிய தொலைவில் அப்பா- மகன் இடையே சமாதானத்துக்கு வாய்ப்பே இல்லை.. கட்சி உடைஞ்சது உடைஞ்சதுதான்’ என்கிற குமுறலையும் கொட்டுகின்றனர் பாமக நிர்வாகிகள்.

டாக்டர் ராமதாஸ் ஒவ்வொரு நாளும் இப்படி ‘நீக்கம்’ அறிவிப்பை வெளியிடுவதன் பின்னணி குறித்து பாமக வட்டாரத்தில் நாம் விசாரித்த போது, டாக்டரின் இந்த அவசரத்துக்கு பின்னால் பெரிய ஸ்கெட்ச் இருக்கிறது. தமக்கு ஆதரவான மாவட்ட செயலாளர்களை நியமித்துவிட்டு உடனடியாக பாமகவின் பொதுக்குழுவை கூட்ட திட்டமிட்டிருக்கிறாராம்.. அந்த பொதுக்குழுவில் மீண்டும் ஜிகே மணியை தலைவராக நியமிக்கவும் முடிவு செய்துள்ளார் டாக்டர். அங்கிட்டும் இங்கிட்டுமாக அலைபாயும் வடிவேல் ராவணன் தற்போது டாக்டர் அணிக்கே திரும்பிவிட்டதால் அவரே பொதுச்செயலாளராகவும் மீண்டும் நியமிக்கப்படுவார் என்கின்றனர்.

“அப்படி தாம் கூட்டும் பொதுக்குழுவுக்கு அன்புமணியும் அவரது ஆதரவாளர்களும் பங்கேற்காமல் போனாலும் எந்த கவலையுமே எனக்கும் இல்லை” என்றும் தம்மை சந்திப்பவர்களிடம் சொல்லி வருகிறாராம் டாக்டர்.

மேலும் அன்புமணி முகாமில் இப்போது அவரது மனைவி சவுமியாதான் ரொம்பவே ஆக்டிவ்வாக களமிறங்கிவிட்டாராம். டாக்டர் ராமதாஸ் புதியதாக நியமிக்கும் நிர்வாகிகளை உடனடியாக தொடர்பு கொண்டு பேசும் சவுமியா, ‘நம்ம கட்சியோட எதிர்காலம் முக்கியமில்லையா? உங்களுக்கு சிறப்பான எதிர்காலமும் காத்துகிட்டிருக்கு.. முதல்ல சின்னய்யாவை வந்து சந்தித்துவிட்டு போங்க’ என்கிறாராம்.

கடலூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த அன்புமணியின் ஆதரவாளர் செல்வமகேஷ் மாற்றப்பட்டு, சசிகுமார் என்பவரை மா.செ.வாக அறிவித்தார் டாக்டர் ராமதாஸ். இந்த அறிவிப்பு வெளியான உடனே ஏக குஷியில், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் கூட்டத்துக்கு சசிகுமார் ஜரூராக ஏற்பாடு செய்து கொண்டிருந்தாராம். அப்போது சசிகுமாரை சவுமியா தொடர்புகொண்டு, ‘நம்ம கட்சியின் எதிர்காலம் சின்ன அய்யா கையில்தானே இருக்கு.. அதனால நீங்க எந்த பிரச்சனை செய்யாமல் சின்னய்யாவை நேரில் வந்து சந்தித்துவிட்டு போங்க.. உங்களுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் சின்னய்யா செய்து தருவார்’ என உறுதியளித்தாராம்.

இதேபோல அரியலூர் மா.செ.வான அன்புமணி ஆதரவாளர் தமிழ் மாறன் நீக்கப்பட்டு ‘தனிவீடு’ ரவியை ராமதாஸ் நியமித்தார். இந்த மகிழ்ச்சியில் தனிவீடு ரவியும், 800-க்கும் மேற்பட்ட பாமகவினரை ஒருங்கிணைத்து கூட்டமும் நடத்தினார். இந்த கூட்டத்துக்கு போன அன்புமணி ஆதரவாளர் தமிழ் மாறன், வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த பஞ்சாயத்து காவல் நிலையம் வரை போனது. ஒரு கட்டத்தில் தமிழ் மாறன் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகளை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இந்த கூட்டம் முடிந்ததுதான் தாமதம், தனிவீடு ரவிக்கு சவுமியாவிடம் இருந்து போன் போயிருக்கிறது. அவரிடமும் வழக்கம் போல, ‘நம்ம சின்னய்யாதானே நம்ம எதிர்காலம்.. கட்சியின் எதிர்காலம்… சென்னை வந்து சின்னய்யாவை சந்தியுங்க.. உங்களுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய சின்னய்யா தயாராக இருக்கிறார்.. அதனால நீங்க பொறுப்பை விட்டுக் கொடுத்துடுங்க.. அமைதியாக இருங்க’ என பேசியிருக்கிறார் சவுமியா அன்புமணி.

இப்படித்தான் டாக்டர் ராமதாஸ் நியமிக்கும் புதிய மா.செ.க்கள் ஒருவரையும் விடாமல் தொடர்பு கொண்டு, “உங்களுக்கு தேவையானதை செய்து தருவோம்; சின்னய்யாவை வந்து சந்தியுங்கள்” என வாக்குறுதி தந்து கொண்டே இருக்கிறாராம் சவுமியா. இப்போது எல்லாம், தைலாபுரம் தோட்டடத்தில் ராமதாஸிடம் சவுமியா அன்புமணி மீதுதான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், வன்னியர் சங்கம் பூம்புகாரில் ஆகஸ்ட் மாதம் நடத்தும் மகளிர் பெருவிழாவுக்கு யாரும் செல்லக் கூடாது எனவும் அன்புமணியும் சவுமியாவும் பாமக மகளிரணியைத் தடுத்து வருகின்றனராம்..

இதனால், மேடையில் பேசும் போது, தாய் மீது துரும்புகூட விழாமல் பார்த்துக் கொள்வேன் என அன்புமணி பேசுகிறார்; ஆனால் அம்மா தலைமையில் நடைபெறும் மகளிர் பெருவிழாவுக்கு மகன் இப்படி முட்டுக்கட்டை போடுகிறாரே என தலையில் அடித்து கொள்கின்றனர் பாமக நிர்வாகிகள்.

இந்த களேபரங்களுக்கு நடுவே சவுமியா அன்புமணி கையில் எடுத்திருக்கும் அஸ்திரம்தான் டாக்டர் ராமதாஸை ரொம்பவே தகிக்க வைக்கிறதாம்..

அப்படி என்ன அஸ்திரத்தை அன்புமணி கேம்ப் கையில் எடுத்திருக்கிறது? அதுதான் Operation KG- ‘ஆபரேஷன் காடுவெட்டி குரு குடும்பம்’.

பாமகவை கடுமையாக எதிர்த்து பேசிவரும் காடுவெட்டி குருவின் மகன் கனலரசனை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியதாம் அன்புமணி அணி.

முதல் கட்டமாக பசுமை தாயகத்தின் காட்டுமன்னார் கோவில் சத்யனிடம் கனலரசனிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாம். மேலும் கனலரசனிடம் பேசும் போது, ‘உங்க குடும்பத்துக்கு எவ்வளவு கடன் இருந்தாலும் சொல்லுங்க.. அதை சின்னய்யா அடைத்து விடுவார்.. அதே மாதிரி பாதியில நிற்கிற வீடு கட்டுமானப் பணிகள் முழுமையாக சிறப்பாக முடிக்கிறதுக்கும் சின்னய்யா உதவி செய்வார்.. இது பற்றி நான் பேச விரும்புகிறேன்’ என சொல்லுங்க என்று சத்யனை தூது அனுப்பினாராம் சவுமியா அன்புமணி.

இந்த கட்டளையை ஏற்று கனலரசனை சத்யன் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, ‘சின்னய்யா கையில்தான் இனி பாமக இருக்கும்.. நீங்களும் வந்துட்டா கட்சியில் முக்கியமான பொறுப்பு தருவாங்க.. உங்களோட முழுமையான எதிர்காலத்தையும் சின்னய்யா குடும்பம் பார்த்துக்கும்’ என்று சொல்லிவிட்டு, சவுமியா தந்த வாக்குறுதிகளையும் அடுக்கினாராம்.

ஆனால் இத்தனையும் பொறுமையாக கேட்டுக் கொன்டிருந்த கனலரசன், ‘ஆமா.. எங்களுக்கு கடன் இருந்தது எல்லாம் இதுநாள் வரை அன்புமணிக்கும் சவுமியாவுக்கும் தெரியாமலா இருந்துச்சு? இத்தனை வருஷமா இல்லாம இப்ப எதுக்கு எங்க மேல திடீர்னு இவ்வளவு அக்கறை?’ என கடுப்பாகவே சத்யனிடம் கேட்டிருக்கிறார். அத்துடன், அன்புமணியையோ சவுமியாவையோ சந்திக்க தாம் விரும்பவில்லை எனவும் முகத்தில் அடித்தது போல சத்யனிடம் சொல்லி அனுப்பிவிட்டாராம் கனலரசன். இந்த தகவலை சத்யன், சவுமியாவுக்கு பாஸ் செய்திருக்கிறார்.

கனலரசனுக்கு அன்புமணி குடும்பம் இப்படி வலை விரித்துக் கொண்டிருக்கும் தகவல் டாக்டர் ராமதாஸுக்கு போக, அரியலூர் மா.செ. தனிவீடு ரமேஷை தொடர்பு கொண்டு, கனலரசனை தைலாபுரத்துக்கு வந்து பார்க்க சொல்லனும்’ என உத்தரவு பிறப்பித்தாராம் டாக்டர் ராமதாஸ். இதனால் கனலரசனை தைலாபுரத்துக்கு அழைத்து வரும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறதாம்.

காடுவெட்டி குரு மகனை வைத்து அப்பாவும் மகனும் ‘ஆபரேஷன்’ நடத்திக் கொண்டிருக்க, எப்பாடுபட்டாவது இருவரையும் ஒன்று சேர்க்க வழக்கம் போல ராமதாஸின் மகள்கள் மும்முரமாக போராடுகின்றனராம். ராமதாஸின் மகள்கள் காந்தி, கவிதாதான் இந்த முயற்சியில் முழுவீச்சில் இறங்கி இருக்கின்றனராம்.. இருந்தாலும் இந்த முயற்சிகள் கை கூடுமா? என்கிற கேள்வியை எழுப்பியபடியே Sent பட்டனை தட்டிவிட்டு ஆப்லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share