வைஃபை ஆன் செய்ததும் மார்ச் 17ஆம் தேதி மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள வீட்டுக்கு பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ அருள் சென்று அவரை சந்தித்த செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அதை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“மார்ச் 16ஆம் தேதி மின்னம்பலத்தில் வெளியான டிஜிட்டல் திண்ணை பகுதியில் டாக்டர் ராமதாஸ், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே தகவல் பரிமாற்ற தூதராக சேலம் பாமக எம்எல்ஏ அருள் இருக்கிறார் என்றும், பாமக கூட்டணிக்காக தேவைப்பட்டால் தனது சேலம் தொகுதியையே தர தயாராக இருப்பதாக எடப்பாடி ஆஃபர் அளித்தார் என்றும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதை உறுதி செய்யும் வகையில்… மார்ச் 17 ஞாயிற்றுக்கிழமை மாலை 4. 15 மணிக்கு பாமக எம்எல்ஏ அருள் எடப்பாடியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். எடப்பாடியின் வீட்டுக்கு அருள் சென்றதற்குக் காரணமாக அமைந்தது இன்று மதியம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ்- டாக்டர் அன்புமணி ஆகியோரின் சந்திப்பு.
வருகிற மக்களவைத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைக்கலாம் என்று டாக்டர் ராமதாஸும் பாஜகவோடு கூட்டணி அமைக்கலாம் என்று டாக்டர் அன்புமணியும் கருதி வருகிறார்கள் என்பது அரசியல் வட்டாரங்கள் அறிந்ததுதான்.
இந்த நிலையில் இன்று காலை தனது தந்தையான டாக்டர் ராமதாஸின் அழைப்பின் பேரில் சென்னையிலிருந்து தனது மனைவியோடு புறப்பட்ட டாக்டர் அன்புமணி மூன்று மணி நேர பயணத்துக்கு பிறகு தைலாபுரம் தோட்டத்தை அடைந்தார். தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸும் அன்புமணியும் குடும்பத்தோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டிருக்கிறார்கள்.
தைலாபுரம் தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் காய்கறிகள், நாட்டு மாட்டு பால், தயிர் ஆகியவை உள்ளடக்கிய வெஜிடேரியன் உணவை இன்று தந்தையும் மகனும் குடும்பத்தோடு அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டனர்.
இந்த சந்திப்பின்போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியிடம் சில உருக்கமான வேண்டுகோளை வைத்திருக்கிறார்.
‘இதான் என்னோட கடைசி தேர்தலாக இருக்கும்னு நினைக்கிறேன்’ என்று டாக்டர் சொன்னவுடனே அன்புமணி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும், ‘அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நீங்க 100 வயசு நல்லா இருப்பீங்க. உங்களுக்கு ஒரு குறையும் வராது’ என்று தழுதழுத்திருக்கிறார்கள்.
அப்போது டாக்டர் ராமதாஸ், ‘இந்த முறை எப்படியாவது சில பாட்டாளி மக்கள் கட்சி எம்பிக்களையாவது நான் டெல்லிக்கு அனுப்ப ஆசைப்படுறேன். நாம அதிமுகவோடு கூட்டணி வைத்தால் தான் அது சாத்தியம். தமிழ்நாடே ஒட்டுமொத்தமா பிஜேபிய எதிர்க்குற நிலைமையில நாம அந்த கட்சியோடு கூட்டணி சேர்ந்தா ஜெயிக்க முடியாது. அதனால இந்த தேர்தலுக்கு மட்டும் என்னோட பேச்சைக் கேளுங்க. அடுத்து உங்க இஷ்டம் போல முடிவெடுத்துக்கலாம்’ என்று தந்தையும் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் வைத்த சென்டிமென்ட் வேண்டுகோளை அன்புமணியால் மீற முடியவில்லை. அதிமுக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் அன்புமணி.
இதன் பிறகுதான் எம்.எல்.ஏ. அருளுக்கு தைலாபுரம் தோட்டத்தில் இருந்து தகவல் சொல்லப்பட்டு, அவர் மாலையே எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்றார். எடப்பாடியின் வீட்டில் சுமார் இரண்டு மணி நேரம் இருந்துள்ளார் அருள். அப்போது அருளின் ஐ போனில் இருந்தே எடப்பாடி பழனிசாமி டாக்டர் ராமதாஸிடமும், டாக்டர் அன்புமணியிடமும் உரையாடியிருக்கிறார். இதன் மூலம் அதிமுக -பாமக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்பதுதான் இன்றைய மாலை நேர தகவல்.
மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம் அல்லது ஆரணி, தர்மபுரி, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், சேலம் ஆகியவை பாமகவின் பட்டியலில் இருக்கின்றன.
இன்று நடந்த சந்திப்புகளையடுத்து கூட்டணியை வெளிப்படையாக உறுதி செய்வதற்காக… அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியே தைலாபுரம் தோட்டத்துக்கு செல்லும் வாய்ப்பும் இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
Comments are closed.